இன்று முதல் மதுரையில் முழு ஊரடங்கு – ஜூன் 15 இல் எடுக்கப்பட்ட முடிவு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும்,ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்பியது.

ஆனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிற மாவட்டங்களைப் போல பேருந்து,தொடர்வண்டி போன்ற பொதுப் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படவில்லை.இருந்தாலும், இந்த நான்கு மாவட்டங்களிலும் தொற்று அதிகரிப்பதாகக் கூறி ஜூன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து,மதுரையிலும் ஜூன் 23 ஆம் தேதி (இன்று) நள்ளிரவு முதல் 30 ஆம் தேதி வரை 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகஅரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘கொரோனா தொற்றைக்
கட்டுப்படுத்த, மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ஜூன் 23 ஆம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது கடந்த 15 ஆம் தேதி சென்னையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏழு நாள் ஊரடங்கின் போது. ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜூன் 28) தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின்போது, மருத்துவமனை, ஆய்வகங்கள், மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், டீக்கடைகள், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Response