இனிவரும் நாட்களில் சென்னையில் கொரோனா தொற்று குறையும் எப்படி?

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது மக்களிடையே பயத்தை உண்டாக்கும் என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டியில்.கூறி இருப்பதாவது:-

சென்னையில் பரிசோதனை செய்யும் தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவர் என்கிற உத்தரவு சென்னையில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையே, மக்களைப் பயமுறுத்தும் நோக்கமல்ல.

சென்னையில் அதிகமான ஆய்வகங்கள் உள்ளன. அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஏற்கனவே, மற்ற மாவட்டங்கள் / மாநிலங்கள் போன்றவற்றிலிருந்து வருபவர்களை சோதனை இல்லாமல் தனிமைப்படுத்தி வருகிறோம். இது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கம் மட்டுமே. இந்த நடவடிக்கை மூலம் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

சோதனைக்கு வருபவர்கள் தங்கள் சுய விபரங்களை வழங்குவதோடு அவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில் உள்ளவர்கள் விவரங்களைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்

சென்னையில் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 6 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னர் முடிவுகள் வரும் இரண்டு நாட்களுக்குள் தொற்று பாதித்து உள்ள நபர் மூலம் பலருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த விதமான பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் தான் சென்னை மாநகராட்சி இம்முடிவை எடுத்துள்ளது என்றார்.

மேலும்,பரிசோதனைக்கு சென்ற ஒருவரின் சோதனை முடிவுகளில் முதலில் நெகட்டிவ் என வரும். பின்னர் ஒரு சில நாட்களில் மீண்டும் அவருக்கு பாஸிட்டிவ் ஆக வரும். எனவே அவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை அவசியமாகிறது என்றவர், முழுமையாக நெகட்டிவ் என முடிவுகள் வந்தால் அந்த நபர்களுக்கு தனிமைப் படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றார்.

அதிகாரிகள் இப்படிச் சொன்னாலும் சமுதாயச் செயற்பாட்டாளர்களின் கருத்து வெறுமாதிரி இருக்கிறது.

அவர்கள், சென்னையில் தாமாக முன்வந்து ஏராளமானோர் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். அதனாலேயே தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும், இதனால் சோதனைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே இம்முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இதனால் இனிவரும் நாட்களில் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response