வறுமையில் வாடும் மக்களிடம் சாராயம் விற்று நிதி திரட்டுவதா? – மகளிர் ஆயம் கண்டனம்

தமிழ்நாடு அரசே!மதுக்கடைகளைத் திறந்து குடும்பங்களைச் சீரழிக்காதீர் என்று மகளிர் ஆயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 7 ஆம் தேதியிலிருந்து (07.05.2020) திறந்துவிடுவது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதைக் கண்டு, பெண்கள மனம் பதறி நிற்கிறார்கள்.

மதுக்கடை மூடப்பட்டிருந்ததால், கட்டுப்பாட்டோடு குடிக்காமல் இருந்தவர்களெல்லாம் பல மடங்கு வெறியோடு குடிக்கப் போகிறார்கள். கடந்த ஒரு மாதமாக இருந்த குடும்ப அமைதி நிரந்தரமாக சீரழியப் போகிறது!

கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும், தில்லியிலும் மதுக்கடை திறந்தவுடன், முண்டியடித்துக் கொண்டு செல்லும் மக்களைப் பார்க்கும்போது, அதேபோல் இங்கேயும் நடந்து – அடுத்த அலை கொரோனா பரவலுக்கு தமிழ் நாடு அரசே பாதை திறந்து விடுவதுபோல் உள்ளது.

இந்திய அரசிடம் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியைப் பெறுவதற்கு அரசியல் உறுதியற்ற ஆட்சியாளர்கள், ஏற்கெனவே வேலையின்றி வறுமைப்பட்டிருக்கும் மக்களின் தலையைத் தடவி, அவர்களிடம் சாராயம் விற்று, அரசுக் கருவூலத்திற்கு நிதி திரட்ட முனைகிறார்கள்.

நேற்று (04.05.2020) பெட்ரோல் – டீசல் மீது மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி, அதன் வழியாக அனைத்துப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்த தமிழ்நாடு அரசு, இப்போது மக்கள் மீது அடுத்த பெரும் தாக்குதலாக டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கிறது. மக்களைச் சுரண்டி ஆட்சி நடத்துவது என்ற வழியைத் தவிர, வேறு தன்மானமுள்ள வழி தெரியாத மக்கள் பகை ஆட்சியாக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மாறுவது வேதனையாக உள்ளது.

மக்களைச் சீரழித்து அரசுக்கு வருமானம் திரட்டுகிற வழியை தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். பக்கத்து மாநிலங்களில் மதுக்கடைத் திறக்கிறார்கள் என்பதையோ, கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று சொல்லியோ மதுக்கடை திறப்பதை ஏற்க முடியாது. பிற நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் மதுக்கடைகளின் விளைவு எதுவாக இருப்பினும், தமிழ் நாட்டில் அது சீரழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெளிவான கண்கண்ட உண்மை!

கொரோனா முடக்க காலத்தில் காவல்துறையின் கண்காணிப்பு இருந்ததால், பெருமாளவு கள்ளச்சாராயம் தலைதூக்கவில்லை. காவல்துறை கண்காணிப்பு தொடருமானால், கள்ளச் சாராயம் பெரிதும் புழக்கத்திற்கு வராது. எனவே, இந்தத் தவறான காரணங்களைக் காட்டி தமிழ்நாடு அரசு தனது மக்கள் பகை முடிவை ஞாயப்படுத்தக் கூடாது.

மகளிர் ஆயம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியது போல், தமிழ்நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருள் விற்பனையை தமிழ்நாடு அரசே மேற்கொண்டால் ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாய் வருமானம் வரும். தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு திரட்டும் வரிப்பணத்தில் பாதித் தொகையை இந்திய அரசிடமிருந்து வலியுறுத்திப் பெற்றால் உரிய நிதி கிடைக்கும். இந்த மாற்று வழிகளை தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.

மக்களைச் சீரழிக்கும், உழைப்பாளர் குடும்பங்களை கொடும் வறுமையில் தள்ளிவிடும் மதுக்கடைத் திறப்பு என்ற முடிவைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். மதுக்கடைகளைத் திறந்து, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுப் பெண்களின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டாமென்றும் எச்சரிக்கிறோம்!

இன்னணம்

ம. இலட்சுமி,தலைவர் – மகளிர் ஆயம்.

அருணா,பொதுச்செயலாளர் – மகளிர் ஆயம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response