சோப்பு போட்டு கையைக் கழுவலாம், வயிற்றைக் கழுவ முடியுமா?

சோப்பு போட்டு கையைக் கழுவினால், சமூக இடைவெளியைப் பராமரித்தால் – மரணத்திலிருந்து தப்பி விடலாம் என்பது நடுத்தர வர்க்கமும் அதற்கு மேலே உள்ளவர்களும் கொண்டிருக்கும் நம்பிக்கை. அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கை.

இந்த உண்மை தெரியாமல்தான் டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளிகள் வெளியேறினார்களா? “கொரோனாவைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. பட்டினியைக் கண்டுதான் அஞ்சுகிறோம்” “கொரோனாவுக்கு முன்னால் பட்டினி எங்களைக் கொன்று விடும்” என்று சொல்லாத மக்கள் இல்லை.

சோறு போட முடியாத அரசுக்கு, “வீட்டுக்குள் இரு” என்று உத்தரவு போட உரிமை உண்டா? மக்களைப் பொருத்தவரை லாக் டவுன் என்பது ஒரு வீட்டுக்காவல். அதாவது சிறை.

சிறையில் இருக்கும் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கும் அரசு சோறு போடக் காரணம், அவனது உடல் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. அரசின் கஸ்டடியில் இருப்பதால் அரசுதான் சோறு போட வேண்டும். மீறினால் அவனை தண்டிப்பதற்கான அருகதையை அவனுக்கு சோறு போடுவதிலிருந்துதான் அரசு பெறுகிறது.

இங்கே நடப்பது என்ன? லாக் டவுனில் பூட்டி வைக்கப்பட்ட மக்களுக்கு சோறு போடும் அருகதை இந்த அரசுக்கு இல்லை. ஆனால், அந்த பரிதாபத்துக்குரிய உழைப்பாளி மக்கள் ஊருக்கு நடந்து சென்றால் போலீசு தாக்குகிறது. அரசு, கிருமி பரவுவதை தடுத்து சமூகத்தைக் காப்பாற்றுகிறதாம்.

சமூக நலனை முன்னிட்டு வெளியே வரக்கூடாது என்பதெல்லாம் சரிதான். எந்த “சமூகத்தின்” நலனுக்காக யார் வெளியே வரக்கூடாது? அரசாங்கம் கொடுக்கும் பிசாத்துக் காசை வைத்துக் கொண்டு, அரைப்பட்டினியும் கொலைப்பட்டினியும் கிடந்து உழைப்பாளி மக்களும் அவர்கள் குழந்தைகளும் “சமூகத்துக்காக” தியாகம் செய்ய வேண்டுமா?

“யாருக்கு பொருளாதார வசதி இல்லையோ அவனுக்கு உயிர்வாழும் உரிமை இல்லை” என்பதுதான் அரசு கூறுகின்ற செய்தி.

ஆளும் வர்க்கம் முதல் நடுத்தர வர்க்கம் வரையிலான “சமூகத்தினரின்” உயிரை கொரோனாவிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தேவையான சமூக அக்கறையுடன் ஏழைகள் நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தண்டனை.

ஏழைகளின் உயிரை பட்டினியிலிருந்து காப்பாற்றுவதற்குத் தேவைப்படுகின்ற சமூக அக்கறை அரசுக்கோ நடுத்தர வர்க்கத்துக்கோ இல்லையென்றால்? அது தண்டனைக்குரிய குற்றமல்ல. இருந்தால் அது மாபெரும் கருணை.

கொரோனா வந்து செத்தால்தான் மரணமா? பட்டினி சாவுகள் மரணத்தில் சேராதா?

0000

கொரோனா மரணம் பற்றிய புள்ளி விவரங்கள் அன்றாடம் வெளிவந்து நமக்கு அதிர்ச்சியூட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நமக்கே பழகிப்போன, சமூகத்துக்கும் இந்த அரசுக்கும் எந்த விதத்திலும் அதிர்ச்சியூட்டாத பல கொடிய மரணங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆணவக்கொலை, தீண்டாமைக்கொலை, இசுலாமியர்கள் படுகொலை என்பன போன்ற “சர்ச்சைக்குரிய” மரணங்களை விட்டுவிடுவோம்.

யூனிசெஃப் இன் கணக்கின் படி 2018 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மரணமடைந்த 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 8.8 லட்சம். இது கொரோனாவால் இதுவரை உலக நாடுகள் முழுவதும் இறந்த, இனிமேலும் இறக்கப்போகின்ற மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பன் மடங்கு அதிகம் என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த மரணத்துக்கு காரணம் வைரஸ் அல்ல. பட்டினி. இறந்த 8.8 லட்சம் குழந்தைகளில் 6 லட்சம் பேர் பட்டினியாலோ ஊட்டச்சத்துக் குறைவினாலோ இறந்திருக்கின்றனர்.

உங்களுடைய 3,4 வயதுக் குழந்தையையும், அதன் மழலையையும் மனதில் ஓட விடுங்கள். அந்தக் குழந்தையைப் பட்டினிக்கு பலி கொடுப்பதை மனதாலும் நீங்கள் கற்பனை செய்ய முடியுமா?

நடந்து கொண்டிருப்பது கற்பனையல்ல, நிஜம்.

கொரோனாவுக்குத்தான் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. பட்டினி என்ற இந்த வைரசுக்கான தடுப்பு மருந்தை மனிதன் குரங்காக இருக்கும்போதே கண்டுபிடித்துவிட்டான். இருப்பினும் உணவு எனும் அந்த மருந்து இந்தக் குழந்தைகளுக்குத்தான் கிடைக்கவில்லை.

உழைப்பாளி மக்களுக்கு அரைகுறை வேலைவாய்ப்பு கிடைத்துவந்த நிலையிலேயே இத்தனை குழந்தைகள் பட்டினியில் செத்திருக்கின்றன என்றால், வேலைவாய்ப்பும் வருமானமும் அறவே இல்லாத இன்றைய சூழ்நிலையில் ஆகப்பெரும்பான்மையான மக்களின் நிலை என்ன? அவர்களுடைய குழந்தைகளின் நிலை என்ன?

0000

மோடியின் அறிவிப்பு வந்தவுடன் லட்சக்கணக்கானோர் நகரங்களிலிருந்து கிராமப்புறம் நோக்கிச் சென்றார்களே, அந்தப் புலம் பெயர் தொழிலாளிகள் நகரத்திலிருந்து அனுப்பும் காசில்தான் கிராமத்தில் அவர்களது பெண்டு பிள்ளைகளும் பெற்றோரும் அரை வயிற்றுக் கஞ்சி குடித்து வந்தார்கள்.

புதிய தாராளவாதம் விவசாயத்தைக் கொன்று விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவிட்டதால், நகரத்தின் காலைக்கழுவித்தான் கிராமங்கள் கஞ்சி குடித்து வருகின்றன.

இந்த நகர்ப்புற தொழிலாளிகளாக மாறிவிட்ட இந்த முன்னாள் விவசாயிகள், தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 50 விழுக்காட்டை கிராமத்துக்கு அனுப்புகிறார்கள் என்று கூறுகின்றன ஆய்வுகள். பிகார் மாநிலத்தின் புலம்பெயர் தொழிலாளிகள் இவ்வாறு அனுப்பி வைக்கும் தொகை மட்டும், அந்த மாநிலத்தில் ஜி.டி.பி யில் 35.6% என்பது இப்பிரச்சனையின் பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சான்று.

இந்தியாவில் விவசாயம் அல்லாத தொழில்கள் பலவற்றில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை மட்டும் 50 கோடி. சிறு நடுத்தர தொழில்களில் பணியாற்றுவோர் முதல் சுய தொழில் செய்வோர் வரை அனைவரும் இதில் அடக்கம். ஊரடங்கில் இவர்களெல்லாம் வயிற்றைக் கழுவுவது எப்படி?

நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு என்று இரவு 8 மணிக்கு அறிவித்த பிரதமரின் மனதில் இந்த மக்கள் இல்லை. ஊரடங்கின் போது மூன்று வேளை தின்று விட்டு வீட்டில் இருக்கும் மக்கள் தமது ஆரோக்கியத்தைப் பேணவும், மனச்சோர்வை நீக்கவும் என்னென்ன யோகாசனங்கள் செய்யலாம் என்று செய்முறை வழிகாட்டுதல் கொடுத்தாரே பிரதமர், அந்த மக்கள்தான் அவரைப் பொருத்தவரை இந்தியச் சமூகம். அந்த வர்க்கங்கள்தான் அவருடைய மக்கள்.

பிரதமரின் “யோக நித்திரை” வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருந்த அதே நாட்களில், அவரது வாரணாசி தொகுதியில், செங்கல் சூளைகளில் வேலை செய்யும் முசாஹிர் என்ற ஆகப் பின்தங்கிய தலித் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் புல்லைத் தின்று கொண்டிருந்தார்கள். அதை வீடியோ எடுத்து வெளியிட்ட “ஜன சந்தேஷ்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் வினீத், “அந்தக் குழந்தைகள் சோற்றைக் கண்ணால் பார்த்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன” என்ற உண்மையையும் உடைத்துவிட்டார். உடனே பொய்ச் செய்தியைப் பரப்பியதாகவும், தலித் சமூகத்தை இழிவு படுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது யோகி அரசு.

“அந்தக் குழந்தைகள் தின்றது புல் அல்ல. புல்லில் இருந்த விதைகளைத்தான் தின்றனர். இதோ என்னுடைய பிள்ளையும் புல்லைத் தின்கிறான் பாருங்கள்” என்று தன் மகன் புல்லைத் தின்னும் வீடியோவை வெளியிட்டு, “உண்மையை” நிலைநாட்டினார் வாரணாசி மாவட்ட ஆட்சியர்.

தனது தொகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் பட்டினியைப் போக்க மோடி கூறிய தீர்வு என்ன? “நவராத்திரி தொடங்கி விட்டது. ஊரடங்கின் 21 நாட்களிலும் ஒவ்வொருவரும் 9 குடும்பங்களுக்கு சோறு போட்டு புண்ணியம் தேட வேண்டும்” என்று வாரணாசி தொகுதியைச் சேர்ந்த மேன்மக்களுக்கு வீடியோ மூலம் உபதேசம் செய்தார் பிரதமர்.

“நிலப்பிரபுக்களின் தயவில் விவசாயிகள், ஆதிக்க சாதியினரின் தயவில் ஒடுக்கப்பட்ட சாதிகள், முதலாளியின் தயவில் தொழிலாளிகள்” – என்ற சங்க பரிவாரத்தின் சித்தாந்தம் மோடியின் சிந்தனையில் மட்டுமல்ல, ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. ஆண்டைகள் வீசும் மிச்சம் மீதியில்தான் அடிமைகள் வாழவேண்டும் என்பதுதான் அவர் அறிந்த தர்மம்.

அதனால்தான் மக்களின் பட்டினியைப் போக்க அரசு என்ன செய்யப்போகிறது என்பதை தனது 8 மணி உரையில் சொல்வதற்கு அவர் “மறந்து”விட்டார்.

ஏனென்றால், சங்க பரிவார மூளையின் “டிசைனே” அப்படிப் பட்டதுதான்.

0000

மார்ச் 26 ஆம் தேதியன்று நிர்மலா சீதாராமன் நிவாரணம் அறிவித்தார். அந்த 1.7 லட்சம் கோடிக்கான கணக்கைப் பிரித்துப் போட்டு, அதன் லட்சணத்தை பத்திரிகையாளர் சாய்நாத் அம்பலமாக்கியிருக்கிறார். மூன்று மாதங்களுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக தரப்படும். ஏற்கனவே ரேசனில் கொடுக்கப்பட்டு வரும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை வாங்க காசு கொடுக்க வேண்டாமென்று எதுவும் சொல்லவில்லை. இவையன்றி ஒரு கிலோ பருப்பு. பிரதமர் கிசான் திட்டத்தின் ஆண்டுக்கு 6000 தரப்படுவதன் முதல் தவணை 2000, நூறு நாள் வேலை திட்டத்தின் கூலி 20 ரூபாய் உயர்வு (ஆனால் வேலை கிடையாது), முதியோர், கைம்பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் 1000 ரூபாய், 20 கோடி பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் 500 ரூபாய்.

அறிவிக்கப்பட்டவைகளில் பாதிக்கு மேற்பட்டவை ஏற்கனவே உள்ள திட்டங்கள்தான் என்றும் மீதி எல்லாமே சொற்ஜாலங்கள்தான் என்றும் கூறுகிறார் சாய்நாத். ஜெயரஞ்சன் அவர்களின் கூற்றுப்படி அறிவித்ததில் சுமார் 40,000 கோடி மட்டும்தான் புதிதாக ஒதுக்கப்படும் தொகை.

பணம் கிடக்கட்டும். பசிக்குத் தேவைப்படுவது சோறு. வட மாநிலத்தில் அது ரொட்டியும் உப்பும். இங்கே பழைய சோறும் பச்சை மிளகாயும். இதை அரசால் தர முடியாதா?

இந்திய உணவு கார்ப்பரேசனின் கிடங்குகளில் மார்ச், 2020 கணக்கின்படி 7.7 கோடி டன் உணவு தானியங்கள் நிரம்பி வழிகின்றன. தற்போது ரபி பருவ அறுவடை முடிந்தவுடன் மேலும் 2 கோடி டன் இருப்பு அதிகரிக்கும்.

மிதமிஞ்சி இருக்கும் இந்த உணவு தானிய இருப்பைக் கொண்டு பட்டினி என்ற பேச்சே இல்லாமல் மக்களுக்கு சோறு போட முடியும். “ஏற்கனவே கிடங்குகள் நிரம்பி தானியங்கள் மக்குகின்றன, எலிக்கு தீனியாகின்றன. தற்போது ரபி பருவ கொள்முதல் செய்யவேண்டுமென்றால் கிடங்குகளில் இடமில்லை. மக்கிப் போனவற்றை கழித்தாக வேண்டும். இப்படி கழித்துக் கட்டவேண்டிய தானியத்தைத்தான், அடுத்த 3 மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ இலவசம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்” என்று முகத்திரையைக் கிழிக்கிறார் பொருளாதார வல்லுநர் ஜீன் திரேஸ்.

இதுதான் பாரம்பரிய ஹிந்து தர்ம சிந்தனை! மிச்சம் மீதி சோற்றையும் பழைய துணியையும் வேலைக்காரிக்கு வாரிக் கொடுக்கும் நிர்மலா மாமியின் “கருணை”, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொருளாதாரத் “திட்டம்”, மோடியின் நவராத்திரி “உபதேசம்”, பால்கனி அகல்விளக்கு “நம்பிக்கை”, டிவி ராமாயண “பக்தி”, யோகாசனாதி விஷயங்களெல்லாம் பாரம்பரிய ஹிந்து தர்ம சிந்தனையால் வரையப்பட்டிருக்கும் லட்சுமண ரேகைக்கு உட்பட்டல்லவோ இயங்குகின்றன!

0000

சில நாட்களுக்கு முன், என்.டி.டி.வி தொலைக்காட்சியில் பிரணாய் ராய் ஒருங்கிணைத்த விவாதமொன்றில், மோடி அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், கவுசிக் பாசு, நோபெல் பரிசு பெற்ற அமர்த்யா சென், அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகிய அனைவரும் ஒரே குரலில் சொல்கிறார்கள், “உணவு தானியங்களை இலவசமாக வழங்குங்கள். தகுதியானவர்களுக்கு மட்டும்தான் தரவேண்டும் (targeted) என்றெல்லாம் பார்ப்பதற்கு இது நேரமல்ல, தகுதியற்றவர்கள் சிலருக்குப் போனாலும் பரவாயில்லை. உடனே கொடுங்கள். அவசரம்” என்று அனைவரும் ஒரே குரலில் கூறுகிறார்கள்.

“1.7 லட்சம் கோடி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.8% தான். அமெரிக்கா 10%, மலேசியா 17% செலவிடுகிறார்கள். குறைந்த பட்சம் 5 விழுக்காடு தொகையாவது (சுமார் 10 லட்சம் கோடி) ஒதுக்க வேண்டும். பற்றாக்குறை பற்றி சிந்திக்கும் நேரமல்ல இது” என்று அனைவரும் சொல்கிறார்கள்.

அரவிந்த் சுப்பிரமணியமும் கவுசிக் பாசுவும் சோசலிஸ்டுகள் அல்லர். புதிய தாராளவாதக் கொள்கையின் குருபீடங்கள்.

“இந்தியாவில் உள்ள குடும்பங்கள் சுமார் 26 கோடி. அதில் 13 கோடி குடும்பங்களுக்கு மாதம் 5000 ரூபாய் கொடுங்கள், கொடுக்க முடியும்” என்று கூறுகிறார் ப.சிதம்பரம்.

“இந்த 500 ரூபாய் காசை வாங்குவதற்காக பேருந்து போக்குவரத்து இல்லாத இந்தக் காலத்தில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு மக்கள் வரவேண்டும். வங்கியின் கூட்ட நெரிசல் தொற்றுக்கு வழிவகுக்கும். “கணினி வேலை செய்யவில்லை, ரேகை பொருந்தி வரவில்லை” என்று ஏதாவது காரணம் சொல்லி அலைக்கழிப்பார்கள். எனவே பணத்தை வங்கியில் போடாமல் கையில் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று எடுத்துச் சொல்கிறார் ஜீன் திரேஸ். அவர் சொன்னதைப் போலவே ஜன்தன் திட்டத்தின் 500 ரூபாய் காசை வாங்க மக்கள் அலை மோதுகிறார்கள்.

மோடி அரசு எந்தக் கோரிக்கைக்கும் பதில் சொல்லவில்லை.

தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிரணாப் சென், “மக்களின் உணவுத்தேவைகள் உடனே நிறைவு செய்யப்படவில்லையென்றால் உணவுக் கலகம் வெடிக்கும்” என்று அச்சம் தெரிவிக்கிறார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேசனல் ஹெல்த் சிஸ்டம்ஸ் ரிசோர்ஸ் சென்டர் என்ற அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநரான டாக்டர் சுந்தரராமன், “மக்கள் நகரத்திலிருந்து வெளியேறும் போக்கு அதிகரிக்குமானால், அந்த மக்களின் தேவையை உடனே நிறைவு செய்யவில்லையானால், வரவிருக்கும் பட்டினிச்சாவுகள் கொரோனா சாவுகளை விஞ்சிவிடும்” என்று எச்சரித்திருக்கிறார்.

இந்த எச்சரிக்கைகள் எதுவும் மோடி அரசில் காதில் ஏறவில்லை. பட்டினியால் பரிதவிக்கும் மக்களின் அவலக்குரலை இந்த அரசு பொருட்படுத்தவே இல்லை.

ஏன் பொருட்படுத்தவில்லை என்பதுதான் நாம் பதில் தேடவேண்டிய கேள்வி. “அக்கறை இல்லை, அலட்சியம், திறமை இல்லை” என்ற விமர்சனங்களெல்லாம் மேலோட்டமானவை.

ஏழைகளுக்கு இரண்டாயிரமோ ஐயாயிரமோ கொடுக்க வேண்டுமென்றால், எங்கிருந்து அதைக் கொடுப்பது? யாரிடமிருந்து அதை எடுப்பது – என்பதுதான் கேள்வி. ஒரு வர்க்கத்திடமிருந்து எடுக்காமல் இன்னொரு வர்க்கத்துக்கு வழங்க முடியாது. ஏழைகளிடமிருந்து எடுப்பதும் பண முதலைகளுக்குக் கொடுப்பதும்தான் மோடி அரசு கடைப்பிடித்து வரும் தர்மம்.

ஏற்கனவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், வரிக்குறைப்புகள் காரணமாக மத்திய மாநில அரசுகளின் பற்றாக்குறை “எல்லை” மீறிவிட்டது. கொரோனாவுக்கு முன்னரே பொருளாதாரம் வீழ்ச்சியில் இருக்கிறது. 2021 இல் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி வீதம் 5.8% ஆக இருக்கும் என்று கணித்திருந்த மூடீஸ், 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2.5% என்று தனது மதிப்பீட்டை குறைத்துக் கொண்டது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பான சுமார் 470 பில்லியன் டாலர்களில், 300 பில்லியன் டாலர் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோ முதலீடுகள். “அவற்றில் 15 பில்லியன் டாலர்கள் மார்ச் மாதத்திலேயே வெளியேறிவிட்டன” என்று அபாயச் சங்கு ஊதுகிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்.

“2008 சப் – பிரைம் நெருக்கடியின்போது இருந்ததைப் போல அமெரிக்க ஐரோப்பிய பன்னாட்டு வங்கிகள் பலவீனமாக இல்லை. இன்று அவை பலமாகவே உள்ளன. கொரோனா நெருக்கடியால் போண்டியாகிப்போன அமெரிக்க கம்பெனிகளின் பங்குகளைக் கூட வாங்கத் தயார் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் அறிவித்திருக்கிறது” என்கிறார் ரகுராம் ராஜன்.

இந்திய வங்கிகளின் நிலை அப்படி இல்லை. இந்திய வங்கிகளின் வாராக்கடன் 9% தற்போதைய நெருக்கடியை ஒட்டி இது மேலும் அதிகரிக்கக் கூடும். பல சிறிய தனியார் வங்கிகளும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் திவாலாகக் கூடும் என்று மூடீஸ் கூறுகிறது.

நெருக்கடியான காலகட்டங்கள் எதுவாக இருப்பினும், அரசியல் – பொருளாதார – இராணுவ ரீதியில் வலிமையான நாடுகளை நோக்கியே முதலீடுகள் செல்லும். அமெரிக்க அரசின் பாண்டுகள் அல்லது டாலர் முதலீடு என்பதை நோக்கியே பன்னாட்டு முதலீட்டாளர்கள் அனைவரும் வெளியேறுவர் என்பது பொருளாதார வல்லுநர்களின் மதிப்பீடு.

பன்னாட்டு முதலீடுகளின் வெளியேற்றம்தான் மோடி அரசின் கவலையேயன்றி, நகர்ப்புற உழைப்பாளி மக்களின் வெளியேற்றமல்ல. பங்குச் சந்தையின் வீழ்ச்சிதான் மோடியின் கவலையேயன்றி, மக்களின் பட்டினியல்ல. இரண்டிலும் கவனம் செலுத்தி இரண்டையும் சமாளிக்கும் “நிர்வாகத்திறமைகள் – சர்க்கஸ் வித்தைகளுக்கான” சாத்தியங்கள் அருகிவிட்டன.

புதிய தாராளவாதக் கொள்கை தன் இயல்பிலேயே தோற்றுவித்திருக்கும் நெருக்கடிக்கும், கொரோனா தோற்றுவித்துள்ள சமூகப் பொருளாதார நெருக்கடிக்கும் இடையில் சிக்கியிருக்கிறது ஆளும் வர்க்கம். “வித்தைகளுக்கான சாத்தியம்” குறைவது என்பதன் பொருள் ஜனநாயகப் பிரமைகளைப் பேணுவதற்கான சாத்தியம் குறைகிறது என்பதே ஆகும்.

0000

இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் தருவாயில் இரண்டு செய்திகள்.

“பட்டினி காரணமாக தனது 5 குழந்தைகளை ஒரு பெண் கங்கையில் வீசி விட்டாள்” என்பது நேற்றைய செய்தி. “இல்லை. கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டுதான் குழந்தைகளைக் கொன்று விட்டாள்” என்று உ.பி அரசு அதனை மறுத்திருக்கிறது. அரசின் கருத்தை அந்தப் பெண்ணின் வாயிலிருந்தும் வரவழைத்திருக்கிறது.

இன்று காலை பத்துமணிக்கு உரையாற்றிய மோடி, லாக் டவுனை மே மூன்றாம் தேதி வரை நீட்டித்திருக்கிறார். மக்களின் பட்டினி நிலை குறித்து அவர் ஒரு வார்த்தை பேசவில்லை.

1918-19 ஸ்பானிஷ் ஃபுளூவின் போது, அன்று நிலவிய பஞ்சத்தையும் மீறி விளைந்த தானியங்களைப் போர் முனைக்கு அனுப்பிவிட்டு, மக்களைப் பட்டினியில் தள்ளியது பிரிட்டிஷ் அரசு. பஞ்சமும் நோயும் சேர்ந்து 1.7 கோடி இந்திய மக்களைப் பலி கொண்டன.

இன்றுள்ளது போல அன்று கிராமங்கள் நகரங்களுடன் பிணைக்கப்படவில்லை. தனது 8 மணி திடீர் அறிவிப்பின் மூலம் நகரங்களிலிருந்து கொரோனா கிருமியை கிராமங்களுக்கு கொண்டு செல்ல வழி வகுத்திருக்கிறார் மோடி. இது கிராமங்களில் ஏற்படுத்தவிருக்கும் விளைவை நாம் தெரிந்து கொள்ள இன்னும் பல நாட்கள் ஆகும்.

ஸ்பானிஷ் ஃபுளூவில் உலகிலேயே மிக அதிகமான மக்கள் இந்தியாவில் சாவதற்கு மிக முக்கியக் காரணம் பட்டினி. பட்டினியால் வாடிய உடல்களை மிக எளிதாக வீழ்த்தி விட்டது அந்த வைரஸ்.

ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. ஃபுளூவுக்கு தடுப்பு மருந்து வந்து விட்டது. பட்டினிக்குத்தான் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இன்று அதே பட்டினி கிராமப்புறம் நோக்கி மக்களைத் துரத்துகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் நகரம் கிராமத்தை சார்ந்து இருந்தது. இன்று நகரம் கிராமத்துக்கு கஞ்சி ஊற்றுகிறது. அந்த நகர்ப்புறத் தொழிலாளிகளை நகரத்திலிருந்து கிராமத்துக்கு துரத்தியிருக்கிறது கொரோனா வைரஸ். பட்டினி அவர்களை வரவேற்கிறது.

கிராமங்களின் இன்றைய நிலையை நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது.

அன்று போல் இன்று பஞ்சமில்லை. போர் இல்லை. பிரிட்டிஷ் அரசும் இல்லை.

தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. பட்டினியால் பரிதவிக்கிறார்கள் மக்கள். இடையில் நிற்கும் சுவர் – இந்த அரசு. கெஞ்சினால், கதறினால் அதைக்கேட்டு “சுவர்” வழிவிடும் என்ற நம்பிக்கை இன்னமும் அகன்று விடவில்லை.

“சுவருக்கு செவி கிடையாது” என்பதை மக்கள் உணரச் செய்துவிட்டால், பசி தீர்க்கும் வழியை அவர்கள் கண்டு பிடித்துக் கொள்வார்கள்.

– மருதையன்
ஏப்ரல் 14,2020

Leave a Response