ஊரடங்குக்கு எதிர்ப்பு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் காவல்துறை தடியடி

கொரோனா காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.

இதை எதிர்பாராத தொழிலாளர்கள், மும்பை பாந்த்ராவில் தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்லாயிரக்கணக்கில் அவர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவு இன்று முடிவடையும் நிலையில் தங்கள் ஊர்களுக்குச் செல்லலாம் எனக் கருதி வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் மும்பை பாந்த்ரா தொடர்வண்டி நிலையத்தில் திரண்டனர். ஊரடங்கு நீட்டிக்கப்படும் முன்பாக தொடர்வண்டிகள் இயக்கப்படும் என செய்தி பரவியதால் அவர்கள் கூடினர். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், தொடர்வண்டிகள் இயக்கப்படாது எனவும் தகவல் வெளியானதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதனால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்பதால் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.பல ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்களுடைய சமாதானம் மக்களிடம் எடுபடவில்லை.மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகளிடத்தில் பதில் இல்லை. இதையடுத்து அந்த மக்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

சிதறி ஓடினாலும் போவதற்கு இடமில்லாமல் அவர்கள் சுற்றிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து மகாராஷ்டிரா அரசு அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறதாம். ஆனாலும் அங்கு இன்னும் பதட்டம் தணியவில்லை என்கிறார்கள்.

Leave a Response