ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் அறிக்கையில் அம்பலம்

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு இந்திய ஒன்றியமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதியோடு அது முடிவடைகிறது. அதோடு முடியுமா? மேலும் தொடருமா? என்பதே எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளீயிட்டுள்ள அறிக்கையொன்றில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்பது தெரிகிறது.

காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் தங்கு தடையின்றி மக்களுக்குக் கிடைக்க வழி செய்யும் அறிக்கையை வெளியிட்டுள்ள முதல்வர், அதில் இரண்டு இடங்களில் இது 30.4.2020 வரை தொடரும் என்று அறிவித்துள்ளார்.

அவை….

இக்கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேமித்து வைக்க விவசாயிகளிடமிருந்து பயன்பாட்டுக் கட்டணத் தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டும், இன்னும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் இப்பயன்பாட்டுக் கட்டணத் தொகை எதிர்வரும் 30.4.2020 வரை வசூலிக்கப்பட மாட்டாது. இக்கட்டணத் தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்தை எதிர்வரும் 30.4.2020 வரை செலுத்திட வேண்டியதில்லை.

இவ்விரண்டின் அடிப்படையில் பார்த்தால் ஏப்ரல் 30 வரை அதாவது மேலும் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Response