திராவிட அழகி – எல்லாவித அதிகாரங்களையும் கூண்டில் ஏற்றும் கவிதை நூல்

ஐம்பத்தியொரு கவிதைகள் அடங்கிய சிறுநூல். அதற்கு திராவிட அழகி என்று பெயர்.
அது தந்த உணர்வெழுச்சிகள் ஐம்பத்தியொரு மணிநேரமாக நீடிக்கிறது.

காதல், காமம், கடவுள், மாந்த நேயம், உயிர்நேயம் ,அதிகாரத்துக்கு எதிரான சீற்றம், எல்லைகளற்ற அன்பு ஆகிய எல்லாவற்றையும் பேசியிருக்கிறது இச்சிறுநூல்.

வீட்டுக்கு அஞ்சல் கொண்டுவரும் அஞ்சல்காரர் கூடவே குழந்தைக்கு பிஸ்கட்டும் கொண்டுவருகிறார். அதை, குழந்தைக்கு சார் என்று விலாசமிட்டு வந்தது போல்
கொடுத்துவிட்டுப் போனார் 

என்றதோடு, குழந்தை

அதே தேவ மொழியில் பிஸ்கட்டை
அனுப்பி வைத்த
தேவன் ஒருவனுக்கு
நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள் 

என்றும் சொல்லி சிலிர்க்க வைக்கிறார்.

இன்னொரு கவிதையில், 

இரண்டு எறும்பு மருந்து பாக்கெட் என்றேன் 
மகள் கேட்டாள் 
நம்ம வீட்டு எறும்புக்கு உடம்பு சரியில்லையாப்பா? 
நானும் கடைக்காரரும் விக்கித்து நின்றோம்
எறும்பு மருந்தை அவரும் கொடுக்கவில்லைநானும் கேட்கவில்லை

என்று திகைக்க வைத்த கவிஞர் 

கடவுள் எதிர்வந்தால்
இந்த உலகத்தை
நீங்கள் ஏன் 
குழந்தைகளிடமே கொடுத்துவிடக் கூடாது 
என்று கேட்கும் முடிவிலிருந்தேன் 

என்று சொல்லி மிரள வைக்கிறார்.

பக்கத்துவீட்டிலிருக்கும் ஒரு நாய் அங்கிருந்து கட்டவிழ்த்துக் கொண்டு அடிக்கடி ஓடிவிடுகிறது.அந்த வீட்டுக்காரர் விடாது தேடிப்பிடித்து அழைத்து வருகிறார்.

அவரிடம் அதுதான் ஓடுகிறதே
ஏன் பிடித்துக் கொண்டு வருகிறீர்கள்
எனக் கேட்டதற்கு, 
அடுத்த வேளை சாப்பாட்டுக்குக்
கஷ்டப் பட்டுவிடும் சார் என்றார். 
என்ன சொல்வதென்று தெரியாமல்
மெளனமாய் பார்த்தேன் 

இந்தக்கவிதையில் மனிதர்களைத் தவிர மற்ற உயிர்களைத் துச்சமாக நினைப்பவர் எண்ணங்களில் அறைந்திருக்கிறார் கவிஞர்.

வீட்டுக்குத் திருட வந்தவர் பற்றிய கவிதையின் தலைப்பே திருடர் வந்தார். திருட வந்தவரை வீட்டுக்காரர் பார்த்துவிட்டால் என்ன நடக்கும்? கவிஞரின் உலகத்தில் எல்லாமே மாறுகிறது.

திருட வந்தவருக்குத் தேநீர் தருகிறார் வீட்டுக்காரர். நாளைய தேவைக்கு மட்டுமே எடுத்திருக்கிறேன் என்கிறார் திருடர். அவற்றை விட அதியுச்சமாக 
இந்தப்பக்கம் வரும்பொழுது புதிய பூட்டின் இரண்டாவது சாவியை வாங்கிச்செல்லுங்கள் 
என்கிறார் வீட்டுக்காரர்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், இதுபோல் நிஜத்தில் நடந்தால் நாடு எப்படியிருக்கும்?

காவல்துறையைக் கண்டிக்கிறது ஹெல்மெட் காவலர், வண்டி ஓட்டாமல் ஹெல்மெட் அணிந்து வந்ததற்கான அபராதச் சீட்டை நீங்கள் இன்னும் தரவில்லை என்றேன். 
இந்த வரிகளில் காவல்துறையின் தான் தோன்றித்தனம் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டது.

அதிகாரத்தைக் கேள்வி கேட்கிறது எண் என்கிற கவிதை. ஆதார் அட்டை மூலம் அரசாங்கம் செய்யும் செய்வினைகளை அதில் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்.

கடவுளைக் கேள்வி கேட்கும் கவிதைகளும் இதில் அடங்கியிருக்கின்றன.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்கிற சொல்லின் அடிப்படையை ஆட்டும் விதமாக,
ஆன்மாவையும் உடலையும் தனித்தனியாகத் தண்டிக்கிறீர்கள் இது தவறு என்று கடவுளிடம் குற்றம் சாட்டுகிறார்.
யுகம் படைத்த நாள் முதல் செய்த வேலையைத் தவறு என்று சொன்னதும் கடவுள் நிலைகுலைகிறார். 

இப்ப படுகிற கஷ்டத்துக்குக் காரணம் முன் ஜென்மத்தில் செய்த பாவம் என்பது உட்பட ஏராளமான வாக்குகளை ஒற்றைக் கவிதையில் கேள்விக்குள்ளாக்கி கடவுள் நம்பிக்கையாளர்களை மிக ஆழமாகச் சிந்திக்க வைக்கும் திறன் கொண்டிருக்கிறது இக்கவிதை.

அடுத்து,

யாரால் இந்த பூமி 
இப்படிப் பிறழாமல் 
சுற்றிக் கொண்டிருக்கிறது
என்று தெரியவில்லை?
இதோ இந்தத் தெருவை 
தன் வீட்டின் உள்ளறைபோல் 
திருத்தமாகச் சுத்தப்படுத்திக்
கொண்டிருக்கிற
இந்த ஓனிக்ஸ் பணிப்பெண்
ஒரு காரணமாக இருக்கலாம்

இதில் தன் வீட்டின் உள்ளறைபோல் என்கிற வரிகளில் தூய்மைப்பணியாளர்களின் அர்ப்பணிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறது கவிஞரின் உயர்ந்த உள்ளம்.

எள்ளல்களுக்கும் பஞ்சமில்லை. இவரது மொழிநடையில் படர்ந்திருக்கும் நையாண்டி ஒரு கவிதையில் மொத்தமாய் தன் உருவம் காட்டுகிறது.

நாளும் கோளும் என்கிற அக்கவிதையில்…

அன்று அவன்
வழக்கம்போல் எழுந்தான்
வழக்கம்போல் குளித்தான்
வழக்கம்போல் சாமி கும்பிட்டான்
வழக்கம்போல் அலுவலகம் வந்தான்
வழக்கம்போல் அலுவல் செய்தான்
வழக்கம்போல் திரும்பினான்
வழக்கம்போல் சாப்பிட்டான்
வழக்கம்போல் உறங்கினான்

நாளும் கோளும்
நல்லவிதமாகச் சேர்ந்திருந்த
நாள் அது.

தற்போதைய மத்தியதர வர்க்கத்தின் அல்லல் வாழ்க்கையை இதைவிடச் சிறப்பாக யாராலும் சொல்லிவிடமுடியாது.

சமகாலத்தில் படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்டு பிற்காலத்தில் கொண்டாடும் மனநிலையைக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது யாவரும் கேளிர்.

கிரீடமற்று வீழ்ந்தாலும் 
அதன் உடல் 
பேரரசனின் ஆகிருதியில்
கிடப்பதைப் பாருங்கள்

எனும் வரிகள் முகத்திலறைகின்றன.

அவள் ஆடை அவிழ்க்கிற வீடியோ இது என்று தொடங்கும் திராவிட அழகி பெண்ணின் நிர்வாணம் பற்றிப் பேசுவதாகத் தோன்றலாம், ஆனால் இன்றைய சமுதாயத்தையே அவர் அப்பெண்ணாக்கியிருக்கிறார்.
திராவிடத்தின் ஆடையை ஆரியம் அவிழ்க்கிறது என்னும் எண்ணத்தோடு அக்கவிதையை வாசித்தால் ஏராளமான வாசல்கள் திறக்கும்.

இரண்டு நொடிகள்தான்
தன் தயக்கத்தை 
ஒருகல் எடுத்து 
நாயைப் போல விரட்டினாள்
இப்பொழுது நேராக
அவள்
அவனைக் குத்திட்டுப் பார்க்கிறாள்

இந்த வரிகளில் உள்ள தீவிரம் சமக்கிருதத்தில் சொன்னால் தீட்சண்யம் உலுக்கி எடுத்துவிடுகிறது.

மானுடர் மேல் உயிர்கள் மேல் உலகின் மேல் அளவுகடந்த அன்பு செலுத்தும் கவிஞருக்குள் இப்படி ஓர் ஆவேசமா? என்று வியக்க வைக்கிறது.

எளிய சொற்களில் வலிய சிந்தனைகளை உள்ளிருத்தி ஒவ்வொரு கவிதையையும் பிரசவித்திருக்கும் வி.ஜெ.வஸந்த்செந்தில் சமகாலத்தின் மகாகவிஞன்.

– அ.தமிழன்பன்.

தமிழின் மிகக்காத்திரமான படைப்புகளை வழங்கியிருக்கும் தமிழினி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.

வசந்த்செந்திலுக்கு ஒரு வேண்டுகோள் : தமிழில் ஆழமான மொழிநடை மற்றும் ரசனைக்குரிய நடையைக் கைவரப்பெற்றிருக்கும் நீங்கள் கவிதைகளில் ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.  

Leave a Response