செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அதிமுகவினர் – பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி இன்று (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு சிவகாசியில் மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து போன நிருபர் கார்த்தி சிவகாசியில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

செய்தியாளர் கார்த்தி மீதான இந்த கொடூர கொலைவெறி தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இன்று வெளியான குமுதம் ரிப்போட்டர் இதழில் அமைச்சர் ராஜேந்திர பலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் மீது இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பத்திரிகையாளர் கார்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.பத்திரிகையாளர்கள் சிந்தும் ரத்தம் தமிழகத்திற்கு கேடானது.

செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் கார்த்தி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகக் காவல்துறையையும் தமிழக அரசையும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் செயல்கள் அதிகரித்து வரும் அவல நிலையை கவனத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
03-03-2020

Leave a Response