அமைச்சர் செங்கோட்டையனுக்கு நடிகர் சூர்யா நன்றி

தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டினார்கள். இந்த நிலையில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கையில், 5 ஆவது மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலித்து, இந்த அரசாணையை இரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த முடிவுக்குக் கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது….

படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response