திமுக எம்.பியின் கடும் எதிர்ப்பு – பணிந்தார் வெங்கய்ய நாயுடு

இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தச்சூழலில், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்த துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு காவி நிற ஆடையில், கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து, நெற்றியில் வீபூதியும் குங்குமமுடன் இருக்கும் வள்ளுவரின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

மேலும் தன்னுடைய ட்வீட்டில், “சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது. அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது!” என்று வள்ளுவரைப் புகழ்ந்திருந்தார்.

ஆனால், வெங்கய்ய நாயுடு பதிந்த புகைப்படம்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

தமிழக அரசு ஏற்கனவே திருவள்ளுவரின் அதிகாரபூர்வ புகைப்படத்துக்கு வடிவம் கொடுத்திருந்த நிலையில், காவி உடை திருவள்ளுவரின் படம் ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு தமிழக பாஜகவின் சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இதே காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படத்துக்கு இணையத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டதாகக் கூறி #bjpinsultsthiruvalluvar என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது.

இந்த பிரச்சனை குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், “தமிழக அரசின் அதிகாரபூர்வ வள்ளுவர் படத்தை பயன்படுத்துங்கள். இது சரியல்ல. முதலில், வள்ளுவரின் புகைப்படத்தை நீக்குங்கள்” என்று பதிந்திருந்தார்.

தொடர் எதிர்ப்புகளால் திருவள்ளுவரின் காவி உடை புகைப்படத்தை நீக்கிய வெங்கய்யாவின் அட்மின் அதிகாரபூர்வ திருவள்ளுவரின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

Leave a Response