உள்ளாட்சித்தேர்தல் – அதிமுக எம் எல் ஏ, எம் பி வாரிசுகள் தோல்வி

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

இதன்படி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்கட்டமாக கடந்த 27 ஆம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 37,830 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45,336 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 76.19 சதவீத வாக்குகள் பதிவானது.

அதேபோல் 2 ஆம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2,544 ஒன்றிய குழு உறுப்பினர், 38,916 ஊராட்சி வார்டு உறுப்பினர், 4,924 ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 77.73 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று (சனவரி 2 ஆம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

தொடக்கம் முதலே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற பாரளுமன்ற உறுப்பினர்களின் வாரிசுகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். அவற்றில் சில….

இராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்கான 2 ஆவது வார்டில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதரியா போட்டியிட்டார். இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமியிடம் 1,343 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் கீழநெட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏ. நாகராஜ் மனைவி சிவசங்கரி 41 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம், வலையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவியை தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி கணவர் முருகன் ரூ.14 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஸ்ரீதர் அதிமுக வேட்பாளரான முருகனை 1,307 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் நடுக்கோம்பை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனின் மகன் யுவராஜ் 4 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ஊராட்சியில் பதிவான மொத்த வாக்குகளில் 4 ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகள் மாயமானதால் தேர்தல் முடிவை கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார்.

Leave a Response