வேலூரில் அதிமுக தோல்வி – ஓபிஎஸ் மகிழ்ச்சி?

2019 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளில், பா.ஜ.க 303 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 39 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 37 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்த நேரத்தில், ஓ.பி.எஸ் தனது மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்க கடினமாக முயற்சி செய்தார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது விசுவாசியும், மூத்த ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.வைத்தியலிங்கத்திற்கு அமைச்சர் பதவி வாங்க முயன்றார். இதனால், ரவீந்திரநாத்தின் மத்திய அமைச்சர் கனவு தகர்ந்தது.

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க உறுப்பினர்களில் யாரேனும் இடம் பெறுவர் என்ற நம்பிக்கையுடன் இருந்த அ.தி.மு.க-வினர் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் ஒரு பகுதியாக இல்லாதது, இதுவே முதல் தடவையாகும்.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஏ‌.சி.சண்முகம்,
இந்த முறை வெற்றி பெற்றால் நிச்சயம் மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் களம் இறங்கினார்.

அ.தி.மு.க தரப்பில் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் வேலூரில் கூடாரம் அடித்து களப்பணி ஆற்றினர்.

எப்படியாவது ஏ‌.சி.சண்முகத்தை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று எடப்பாடி பெருமுயற்சி செய்தார். ஏ‌.சி.சண்முகம் வெற்றி பெற்றால், சீனியர் என்று சொல்லி பா.ஜ.க.,விடம் பேசி அமைச்சர் பதவி வாங்கி அதை ஏ‌.சி.சண்முகத்துக்குக் கொடுத்து விடலாம். ஆனால், என்ன நடந்தாலும் ஓ.பி.எஸ் மகனுக்கு அமைச்சர் பதவி சென்று விட கூடாது என்பதில் எடப்பாடி மிக தீவிரமாக இருந்தார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் தேர்தல் முடிவுகள் எடப்பாடி நினைத்ததற்கு மாறாக வந்திருப்பது எடப்பாடியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எடப்பாடியின் இந்த நடவடிக்கையைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஓ.பி.எஸ் தேர்தல் முடிவு பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லையாம்.

இதன் மூலம் அ.தி.மு.க தோல்வியை சந்தித்திருந்தாலும் கூட, எடப்பாடி நினைத்தது நடக்கவில்லை என்பதால், ஓ.பி.எஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சமூகவலைதளங்களில், ஓ.பி.எஸ்.இரவீந்திரநாத் மக்களவையில் பேசும்போது, ஒரேயொரு அதிமுக உறுப்பினர் நான் என்று பேசியதையும் குறிப்பிட்டு கேலி செய்து வருகின்றனர்.

Leave a Response