வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி போட்டியிட்டார். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, இத்தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதன்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், அதிமுக 25,719 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தது. திமுக 24,806 வாக்குகள் பெற்றிருந்தது. நாம் தமிழர் கட்சி 1269 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலை வகித்தது. தபால் வாக்குகளில் அதிமுக 363 வாக்குகளும், திமுக 200 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 17 வாக்குகளும் பெற்றிருந்தன.
முதல் சுற்றின்படி, அதிமுக 25,719 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், 24,806 வாக்குகள் பெற்று திமுக இரண்டாம் இடமும், நாம் தமிழர் கட்சி 1269 வாக்குகளுடன் மூன்றாம் இடமும் வகித்தன. அதிமுக வாக்குகள் அடுத்தடுத்த சுற்றுகளில் படிப்படியாக உயர்ந்து, ஆறாவது சுற்றில் 5,227 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஒரு லட்சத்து 57,773 வாக்குகளுடன் முன்னிலை வகித்தது. அப்போது, திமுக ஒரு லட்சத்து 52,546 வாக்குகள் பெற்றது.
ஏழாவது சுற்றில் திமுக ஏறுமுகம்
ஆனால், ஏழாவது சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலைக்கு நகர்ந்தார். திமுக ஒரு லட்சத்து 81,331 வாக்குகளும், அதிமுக ஒரு லட்சத்து 80,715 வாக்குகளையும் பெற்றன. கதிர் ஆனந்த் 616 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து 8 ஆவது சுற்றில், 2 லட்சத்து 8,831 வாக்குகளுடன் முன்னிலையிலும், 9-வது சுற்றில், 2 லட்சத்து 36,836 வாக்குகளுடன் முன்னிலையிலும் இருந்து வந்தார். 10 ஆவது சுற்றின்படி, திமுக 2 லட்சத்து 63,354 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்தது. அதிமுக 2 லட்சத்து 56,137 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 14,265 வாக்குகளும் பெற்றன.
ஏழாவது சுற்றில் முன்னிலைக்கு நகர்ந்த திமுக தொடர்ந்து முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது. 10 சுற்றுகள் முடிந்த பிறகு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு வெற்றி முகம் தென்பட்டது. 17 ஆவது சுற்றின் முடிவில், 12,555 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். 12,588 வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் 8,460 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவந்தார்.
இறுதிச்சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4.85,340 வாக்குகளைப் பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைப் பெற்றார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக 47.3% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2.63% வாக்குகளையும் பெற்றது.
பணபலம் மத்திய மாநில ஆளுங்கட்சிகள் ஆகியனவற்றை மீறி தி மு க வெற்றி பெற்றிருக்கிறது என்பதால் அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.