அதிமுகவைக் கலைத்து விடுங்கள் – நாஞ்சில் சம்பத் திடீர் ஆவேசம்

மாநிலங்களவையில் முத்தலாக் தொடர்பான சட்ட முன் வடிவை நிறைவேற்ற நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவான. இதைத் தொடர்ந்து, முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

ஏற்கனவே மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால்,குடியரசுத்தலைவரின் ஒப்புதலை அடுத்து, இது சட்டமாக்கப்பட உள்ளது.

242 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இங்கு பாஜ கூட்டணிக்கு 107 உறுப்பினர்களே உள்ளனர்.

வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும் வெளிநடப்பு செய்தனர். அதேபோல, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருக்காது.

ஆனால்,விவாதத்தில் பேசிய போது எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டர் பதிவில், ‘முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத்தும் ஆவேசமாக ஒரு பதிவு போட்டுள்ளார். அதில்..

முத்தலாக் பிரச்சனையில் அதிமுக வெளிநடப்பு செய்ததன் மூலம் அதன் கோரமுகம் அம்பலப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களின் மீது அறிவிக்கப்படாதப் போரைத் தொடுத்ததற்கு சமம் இது.
அண்ணாவின் பெயராலும் திராவிடத்தின் பெயராலும் கட்சி வைத்துப் பிழைப்பு நடத்துவதைவிடக் கலைத்துவிடுவது மிகவும் நல்லது. அதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response