வதந்திகளைப் பொய்யாக்கிய துரைமுருகன்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் போட்டியிட்ட வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் துரைமுருகன் ஒதுங்கி இருந்தார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஒதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இன்னொரு பக்கம், திமுக தலைவருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு எனவேதான் அவர் ஒதுங்குகிறார், கட்சியை விட்டே விலகப் போகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்நிலையில்,தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மறைந்த திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாளான நேற்று நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:

”இது கலைஞரின் பிறந்த நாள். அவர் இல்லாமல் வந்திருக்கிற முதல் ஆண்டு இது. இதில் பேசுவதென்றால் என்னால் துக்கத்தை அடக்க முடியாது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இந்த நேரம் கலைஞர் இருந்திருந்தால் அவர் என்னென்ன பேசுவார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் பரவாயில்லை, மகிழ்ச்சி ஒரு பக்கம். தலைவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். என் கண்ணில் தண்ணீர் வரவில்லை.

ஸ்டாலின் ஏங்கியிருப்பார். இந்த வெற்றியை எல்லோரும் பாராட்டியிருப்பார்கள். எங்களோடு உட்கார்ந்து தலைவர் கலைஞர் வெற்றியை ரசித்திருப்பார். ஸ்டாலின் பேச்சு குறித்து சில சமயம் எங்களோடு பேசுவார். ”துரை, அவன் பேச்சுய்யா என் பேச்சு மாதிரி இருக்குய்யா. நான் தான் பேசுறேனோன்னு கேட்கிறேன்யா. அவன் தான் பேசுறான்” என்று சொல்வார். அந்த மாதிரி பூரித்துப் போவார். இப்போது அவர் இல்லை.

ஸ்டாலினைப் பற்றி எல்லோரும் சொன்னார்கள். மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்க வேண்டும். சுபத்ரா வயிற்றில் இருக்கும்போதே அபிமன்யு எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான். ஆனால், பத்ம வியூகத்தை உடைக்க அபிமன்யுவுக்குத் தெரியவில்லை. ஆனால், என் தலைவர் ஸ்டாலின் எல்லா வியூகத்தையும் உடைக்கத் தெரிந்து வைத்துள்ளார்.

ஸ்டாலினை எல்லோரும் பாராட்டுவதைப் பார்க்கும்போது, நான் கலைஞரை நினைத்து தலைவர் ஸ்டாலினை விட மூத்தவன் என்கிற முறையில் என் நெஞ்சமெல்லாம் மகிழ்ந்துபோனது. கலைஞர் இருக்கும்போது அவர் பேசுவதற்கு வழிவிடுவதைப் போல, இப்போது தலைவர் ஸ்டாலின் பேச நான் வழிவிடுகிறேன்”.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

இந்த விழாவில் அவர் கலந்து கொண்டதும் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதும் அவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

Leave a Response