கலைஞர் கொண்டாடப்படுவது இதனால்தான் – பிறந்த நாள் சிறப்பு

தி மு க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்
96 ஆவது பிறந்தநாள் இன்று. அவர் மறைந்த பின் வருகிற முதல் பிறந்தநாள். ஆனாலும் கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லை. அவர் ஏன் அனைவராலும் போற்றப்படுகிறார் என்பதற்குச் சான்றாக விளங்கும் ஒரு பதிவு. சந்தர் சுந்தர் எழுதியிருக்கும் அந்தப்பதிவு……

வண்ணக்கிளி அண்ணன் இயற்பெயர் மாரிமுத்து.துணை வட்டாட்சியர். அவர் பெண்ணிற்கு திருமணம். பத்திரிக்கை வைக்க நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்.பத்திரிக்கையில் பெண்ணிண் சித்தப்பாக்கள் என்ற இடத்தில் முதலாவதாக என் பெயர் இருந்தது.

அது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது.அதோடு கூச்சமாகவும் இருந்தது.அதனால் “ஏண்ணே எம்பேர போட்டீங்கங்க”ன்னு சாதாரணமாகக் கேட்டேன்.வண்ணக்கிளி அண்ணன் பதட்டமாகி “ஏந்தம்பி..உங்க சாதி சனம் ஏதாவது சொல்லுவாங்கன்னு நெனைக்கிறீங்களா”ன்னு கேட்டார். இப்போது எனக்கு பதட்டமாகிவிட்டது.”எண்ணண்ணே இப்புடி சொல்லிட்டீங்க..அதப்பத்தி கவல படுற ஆளா நானு”ன்னு கேட்டேன்.

சூழ்நிலையை இலகுவாக்க பழைய கதையை பேசினோம்.வண்ணக்கிளி அண்ணண் பழக்கமானதே ஒரு வித்தியாசமான தருணத்தில்தான்.

நான் கேஷியராக பணிபுரிந்த நட்சத்திர விடுதி பாரில் வண்ணக்கிளி அண்ணண் பேரர்.நல்ல இழைத்த கருங்காலி மரம் போல உறுதியாக இருப்பார்.சுறுசுறுப்பாக பரிமாறுவார்.

தினமும் மதியம் மூன்று மணியானால் எஸ்கேப்பாகி மாலை ஆறு மணிக்குத்தான் திரும்புவார்.எங்க போகிறார் என்ன செய்கிறார் என யாருக்கும் தெரியாது.

ஒரு நாள் மாலை அரக்க பரக்க ஓடி வந்தவர் பாத்ரூமுக்குள் ஓடி அடக்க மாட்டாமல் தேம்பி தேம்பி அழுதார்.அப்போது நான் அங்கிருந்தேன்.அவரை தேற்றி என்ன பிரச்சினை எனக்கேட்டேன்.

அவரும் சொன்னார்.அண்ணணுடைய அப்பா வருவாய்துறையில் அலுவலக உதவியாளர்(பியூன்).திடீரென ஒருநாள் பணியில் இருக்கும் போதே இறந்துவிட்டார்.

வண்ணக்கிளி அண்ணண் பத்தாவது தேர்ச்சி பெற்றவர்.ஒரு சிட்பண்டில் சொற்ப சம்பளம்.சிறு வயதிலேயே திருமணம்.இரண்டு குழந்தைகள்.சோறு போட்ட அப்பா இறந்ததால் குடும்பம் தத்தளிக்கிறது.

வண்ணக்கிளி அண்ணண் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பித்தார்.இப்போதுதான் மிகப்பெரிய சோதனை.அவர் அப்பா இறந்த அன்று அண்ணணிண் வயது நிர்ணயிக்கப்பட்ட வயதைவிட மூன்று மாதங்கள் கூடுதலாக இருந்து தொலைந்து விடுகிறது.இதனால் அவரது வேலைகோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

வண்ணக்கிளி அண்ணண் வயது வரம்பை தளர்த்தி பணியிடம் வழங்குமாறு மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கிறார்.

கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர்,வயது வரம்பு தளர்வை அரசு மட்டுமே செய்ய முடியும் என்பதால் வயது வரம்பில் தளர்வு வழங்கி ஆணை வழங்குமாறு அரசுக்கு பரிந்துறை செய்கிறார்.

இதற்கு வருவாய்த்துறை,பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நிதித்துறை ஆகிய துறைகள் ஒப்புதல் அளித்து முதல்வருக்கு அனுப்பி கையொப்பம் பெற வேண்டும்.

ஆனால் வருவாய்த்துறைக்குப் போன கோப்பு வயது வரம்பில் தளர்வு தர இயலாது எனக்கூறி கோப்பினை திருப்பி அனுப்பி விடுகிறது.

இதன்காரணமாகவே வண்ணக்கிளி அண்ணண் கதறி அழுதிருக்கிறார்.நான் அவரைத் தேற்றினேன்.எங்கள் உறவினர் ஒருவர் தலைமைச்செயலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றினார்.அவர் மூலம் ஏதேனும் செய்யலாம் என ஆறுதல் கூறினேன்.

அதேப் போன்று மறுநாள் உறவினரான அந்த பிரிவு அலுவலரை சென்று பார்த்தோம்.அவர் கோப்பு முழுவதையும் படித்து பார்த்தார்.அவர் ஒரு வரைவினை வாயால் சொல்ல சொல்ல நான் எழுதினேன்.அதை அன்றே தட்டச்சு செய்து அனைத்து இணைப்புகளுடன் மீண்டும் விண்ணப்பித்தோம்.

தபால் உரிய செக்க்ஷனுக்கு போகிறதா என கண்காணித்தபடியே இருந்தோம்.அந்த பிரிவு அலுவலரும் ஒவ்வொரு இடமாக கோப்பினை தள்ளி தள்ளி விட்டார்.ஆனால் கோப்பு வருவாய் துறையை தாண்டவில்லை.

அதன்பிறகு ஆட்சி மாற்றம்.கலைஞர் முதல்வராக பதவியேற்றார்.ஒரு வழியாக கோப்பு மூன்று துறைகளையும் தாண்டி முதல்வர் கலைஞருக்கு சென்று விட்டது.

கலைஞர் எல்லா கோப்புகளையும் படித்து பார்த்துதான் கையொப்பம் இடுவார் என கேள்வி பட்டிருந்தோம்.அதனால் என்ன செய்வாரோ என பயந்து கொண்டே இருந்தோம்.காலையில் போன கோப்பு அன்று மாலையே திரும்பியதாக அறிந்தோம்.ஒப்புதல் கொடுக்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என தெரியாமல் குழம்பி தவித்தோம்.

மறுநாள் இருவரும் விடுப்பு சொல்லிவிட்டு தலைமைச்செயலகம் சென்றோம்.அந்த பிரிவு அலுவலரை சென்று பார்த்தோம்.அவர் கட்டைவிரலை உயர்த்தி வெற்றி என்றார்.மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது.இந்த இடத்திற்கு வருவதற்கு முழுதாக ஐந்து வருடம் தேவைப்பட்டது.

தயங்கி தயங்கி கலைஞரின் கையொப்பத்தை பார்க்கலாமா என்றோம்.வெளியாட்கள் அரசு கோப்பை பார்க்க அனுமதி இல்லை என்றார். மிகுந்த வற்புறுத்தலுக்குப்பின் கலைஞர் வேறு ஏதேனும் கோப்பில் குறிப்புகள் எழுதி இருக்கிறாறா என்றோம்.

ஆமாம் ..”மேலும் தாமதிக்காமல் தொடர்புடையவர் ஒரு வாரத்திற்குள் பணியேற்றிடும் வகையில் ஆணை வழங்கவும்”என குறிப்பு எழுதியுள்ளார்.

அதேப் போல ஒரு வாரத்துக்குள் வண்ணக்கிளி அண்ணண் இளநிலை உதவியாளராக பணியேற்று இன்று துணை வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று பணிபுரிகிறார்.

இதில் நாங்கள் பிரமித்த விஷயம் என்னவெனில் அம்பாரமாய் கோப்புகள் குவிந்து கிடந்தபோதும் மேம்போக்காக கையொப்பம் இடாமல் ஒவ்வொன்றையும் படித்து அக்கறையாக குறிப்பெழுதி கையெழுத்திடும் கலைஞரின் பண்பு.

மற்றவர்களிடம் கோப்புகள் வருடக்கணக்கில் தேங்கி கிடந்தாலும் தன்னால் தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அந்த மனிதரின் மனித நேயம் சொல்லில் அடங்காதது.என்ன ஒரு மனிதர் அவர்!

#HBD_KALAIGNAR96

Leave a Response