தேனியில் நடந்த தில்லுமுல்லுகள் சான்றுகள் உள்ளன – ஈவிகேஎஸ் பரபரப்பு பேட்டி

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தமிழக காங்கிரசு முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்திபவனில் மே 26 அன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது….

தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. திருஷ்டி பரிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக, என்னவோ? நான் தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன்.

என்னுடைய தோல்வி உருவாக்கப்பட்டது. மக்கள் ஓட்டுப் போடாமல் ஏற்பட்ட தோல்வி அல்ல. அதிகார பலம், பணம் பலம் இருந்தும் கூட தேனி தொகுதியில் 4.5 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிட தேனி தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவம் கொடுத்து தில்லுமுல்லுகளைச் செய்திருக்கிறது. பணம் மழையாக இல்லை, சுனாமியாக கொட்டி இருக்கிறது.

தேனி தொகுதியில் எப்படியாவது ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருந்தார். தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் மீது இல்லாத காதல், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மீது மட்டும் மோடிக்கு இருந்தது ஏன்? என்று தெரியவில்லை.

தில்லுமுல்லுகள் செய்தாலும் கூட தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தத் தொகுதியான பெரியகுளத்தில் நான் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறேன்.

தேனி தொகுதியில் தில்லுமுல்லுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.

தேனி தொகுதியில் வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று வழக்கில் குறிப்பிடுவேன். வாக்குப்பதிவு எந்திரங்களை விட வாக்குச்சீட்டு முறை தான் சிறந்தது என்று நாங்கள் வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் அமைந்தது போல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காததே மோடி வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டது. ராகுல்காந்தி தான் பிரதமராக வருவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது போன்று வடமாநிலங்களில் மற்ற கட்சித் தலைவர்கள் அறிவிக்காதது தான் காங்கிரசுக் கட்சி தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

தமிழக, கேரள மக்கள் போன்று வடமாநில மக்கள் விவரம் உள்ளவர்களாக இல்லை. மோடியின் பொய் பிரசாரங்களை நம்பி, மயங்கி இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் தெளிவு பெறும் போது, அங்கே பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response