இறுதிக்கட்டத் தேர்தல் இன்று – மோடி எம்.பி ஆவாரா?

கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த மக்களவைத்தேர்தல், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதியுடன் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7வது மற்றும் இறுதி கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தல் நடக்கிறது. பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இதற்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் பெரும் பதற்றம் நிலவுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையால், அங்கு தேர்தல் நடைபெறும் 9 தொகுதிகளின் வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அங்கு துணை ராணுவப் படையினரின் 710 கம்பெனிகள் (ஒரு கம்பெனியில் 100 வீரர்கள்) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்று மாலையுடன் தேர்தல் முடிகிறது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதில், நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிய வரும்.

* இன்றைய தேர்தலில் 10.01 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
* 1.12 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
* மோடி உட்பட 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
* 7 கட்டத்திலும் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படுகிறது.
* மே.வங்கத்தில் தேர்தலை கண்காணிக்க சிறப்பு போலீஸ் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழகத்தில் 4 பேரவை தொகுதிகளிலும், கோவாவில் பனாஜி பேரவை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்கிறது.

Leave a Response