சேலம் விவசாயிகளை மீண்டும் துயரத்தில் ஆழ்த்திய அதிமுக அணி

சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பரப்புரைப் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும், பா.ம.க தலைவர் ராமதாசும் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி,

தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நீர் வளத்துறையில் இருப்பதால் நீரைப் பெறுவதன் அவசியம் எனக்குத் தெரியும். நநி நீர் பிரச்னை இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கிறது. நீர் அதிகமாக உள்ள மாநிலத்தில் இருந்து நீர் பற்றாக்குறையாக்க உள்ள மாநிலத்திற்குக் கொண்டு செல்லுவதைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். முதலில் தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவோம்.

கோதாவரியில் இருந்து 1,100 டி.எம்.சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. கோதாவரி கிருஷ்ணா நதி நீர் இணைப்பு மேற்கொண்டோம். அடுத்து கோதாவரி காவிரி நதி இணைப்பை 60,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய முயற்சியால் தொடங்க இருக்கிறோம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று அ.தி.மு.க வேட்பாளரை வெற்றிபெறச் செய்து டெல்லிக்கு அனுப்பி வையுங்கள். இதுதான் நமக்குள் இருக்கும் ஒப்பந்தம்.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோருக்கு நீர், மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு வசதிகள் கிடைக்க வேண்டும். முதல்வரால் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைகிறது. அதற்குப் பிரதமரும், அவருடைய அமைச்சரவையும் அனைத்து உதவிகளும் செய்கிறது. தற்போது தேர்தலுக்கு அமைந்திருக்கும் கூட்டணி மிக பொருத்தமான கூட்டணியாக அமைந்திருக்கிறது.

சேலம் டூ சென்னை 8 வழி பசுமைச் சாலை இப்பகுதியின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு கொடுக்கப்படும். விவசாயிகளில் கலந்து பேசிச் செயல்படுத்துவோம். இத்திட்டத்தில் முதல்வர் மிகுந்த அக்கறைக் காட்டி வருகிறார். அதனால் இந்த பசுமை வழிச் சாலை நிறைவேற்றப்படும் என்றார்.

சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிராக தீர்ப்பு வந்ததும் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவர் ராமதாசு ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டே நிதின்கட்கரி எட்டுவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று பேசியதால் சேலம் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response