ஜவுளித்துறைக்கு நிலுவை 8000 கோடி – உடனே கொடுக்கக் குரல்கொடுத்த சத்யபாமா எம்.பி

திருப்பூர் ஐவுளித்துறைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா பேசினார்.

அவருடைய பேச்சு….

நாட்டிலேயே மிகஅதிக வேலைவாய்ப்பை அளிக்கும் துறைகளில் இரண்டாவது இடத்தை இந்திய ஜவுளித்துறை அடைந்துள்ளது. 11 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துவரும் ஜவுளித்துறை சரியான கொள்கைகள் பின்பற்றப்பட்டால் 2025 ஆம் ஆண்டு வாக்கில் மேலும் புதிதாக 25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடியதாக மாறும்.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டிய 8000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக இருப்பதால் ஜவுளித் தொழில் துறை கடும் இன்னல்களைச் சந்தித்து வருகிறது.

மேலும், விசைத்தறி துறைத் தேவைகளுக்கு பெரிதும் ஈடுகொடுக்கும் நூற்பாலைகள் மீது விதிக்கப்பட்டுள்ள 40 சதவிகித கட்டுப்பாடு, அவற்றுக்கு சிரமங்களையும் பெரும் நிதி நெருக்கடியையும் கொடுத்துள்ளன.

கைத்தறித் திறன்களின் தேவை குறைந்துள்ளதால் 2003 ஆம் ஆண்டு சுற்றப்பட்ட நூலிழை உற்பத்தி குறித்து நிர்ணயிக்கப்பட்ட 40 சதவிகிதக் கட்டுப்பாட்டை, நூற்பாலைகளின் அதிகரித்துள்ள திறனைக் கருத்தில்கொண்டு குறைக்கவேண்டும் என்று ஜவுளித்துறை ஆணையர் ஏற்கனவே மத்திய அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஜவுளித்துறைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டிய நிலுவைத்தொகை 8000 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கவும் சுற்றப்பட்ட நூலிழை உற்பத்தி குறித்து நூற்பாலைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை 40 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கவும் மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response