உண்ணாநிலையிருந்து உயிர்துறந்த அன்னை பூபதி பிறந்தநாள் இன்று

உண்ணாநிலையில் உயிர் துறந்த ‘உலகின் முதல் பெண் போராளி’ அன்னை பூபதி பிறந்த நாள்

3.11.1932

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இசைப்பிரியாவின் கதறல் காணொளி கண்டும் இந்திய அரசின் பேய் மனம் இரங்க மறுக்கிறது. அன்னை பார்வதியம்மாள் சிகிச்சைக்கு வந்த போதும் இந்திய அரசின் கல் நெஞ்சம் கரையவில்லை. தமிழகம் வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியது. தமிழ்ப்பெண்களை மதிக்கத் தெரியாத இந்திய அரசின் இந்த இழிகுணம் நேற்று முளைத்ததல்ல; அது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே முளைத்த குணம். அன்னை பூபதியம்மாளின் உயிரைப் பறித்த வரலாற்றை அறிவதன் மூலம் இதனை உறுதிப்படுத்தவும் முடியும்.

1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஆயுதப் போர் நடைபெற்று வந்த கால கட்டம். அன்று காந்திய நாட்டிற்கு அகிம்சை வழியில் பாடம் புகட்ட விரும்பி உண்ணாநிலை கொண்டு உயிர் துறந்தவன் திலீபன். அவன் வழியில் உண்ணாநிலையை தொடங்கி உயிர் துறந்த உலகின் முதல் பெண்மணி தான் அன்னை பூபதியம்மாள்.

திலீபன் உண்ணாநிலைக்கும் அன்னை பூபதியம்மாள் உண்ணாநிலைக்கும் ஒரே வேறுபாடு தான். அவன் நீர் அருந்த வில்லை. இவர் நீர் அருந்தினார். இது உலகமெங்கும் கடைபிடைக்கும் நெறிமுறை சார்ந்தது தான். அன்னை பூபதியம்மாள் மட்டக்கிளப்பு மாவட்டம் கிரான் எனும் ஊரில் பிறந்து நாகற்கேணி எனும் சிற்றூரில் வாழ்ந்தவர். அம்பாறை பிரிவு அன்னையர் முன்னணி அமைப்பின் செயல்பாட்டாளரும் கூட! இவருக்கு ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் உண்டு. இரண்டு மகன்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இவரது கடைக்குட்டி மகன் 1990ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் கண்ணதாசன் எனும் பெயரோடு களமாடியவர்.

கிழக்கு மாகாணத்தில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களை துணிவோடு எதிர் கொண்ட இயக்கம் அன்னையர் முன்னணி அமைப்பாகும். இந்திய அரசு விடுதலைப் புலிகளோடு போர் நிறுத்தம் செய்திடவும் புலிகளோடு பேச்சு வார்த்தை நடத்திடவும் இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

இந்திய அரசோடு மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து அன்னையர் முன்னணி நடத்தி வந்த பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தன. அடுத்த கட்டமாக சாகும்வரை உண்ணாநிலைப் போர் நடத்த முடிவு செய்தனர். குலுக்கல் முறையில் அன்னம்மா டேவிட் என்பவர் உண்ணாநிலை மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்னம்மா டேவிட் உண்ணாநிலையை நிறுத்த இந்திய இராணுவம் கீழ்த்தரமான வேலையில் இறங்கியது. தனது தாயாரை கட்டாயப்படுத்தி உண்ணாநிலை இருக்க வைப்பதாக அவரின் மகன்களிடம் கடிதம் எழுதி வாங்கியது. பிறகு அன்னம்மா டேவிட்டை கடத்திக் கொண்டு சென்றது. அதன்பிறகு அன்னையர் முன்னணியினர் அன்னை பூபதியை உண்ணாநிலை இருக்க முடிவு செய்தனர். அன்னை பூபதியம்மாள் 19.3.1988இல் உண்ணாநிலையை தொடங்கினார். இந்திய இராணுவத்திற்கு பதிலடி தரும் வகையில் தானே கைப்பட கடிதம் எழுதினார். அதில்,”சுயவிருப்பத்தின் பேரில் உண்ணாநிலை இருக்கிறேன். சுய நினைவு இழக்கும் பட்சத்தில் என் கணவரோ பிள்ளைகளோ என்னை வைத்திய சாலைக்கு அனுமதிக்க முயற்சி கூடாது” என்று குறிப்பிட்டார்.

அன்னை பூபதியம்மாளின் உண்ணாநிலையில் இந்தியஅரசு மிகுந்த அலட்சியப் போக்கோடு நடந்து கொண்டது. சரியாக முப்பதாம் நாளில் 19.4.1988 அன்று அவர் உயிர் பிரிந்தது. அப்போதும் இந்திய இராணுவம் பூபதியம்மாள் உடலை கைப்பற்றி அவர் சாவை இழிவு படுத்த விரும்பியது. அங்கு கூடியிருந்த தமிழர்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கி ஓடியது. அன்னை பூபதியின் நினைவுகளோடு ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமே! வெளியேறு! என்று சூளுரைத்தனர்.

அன்னை இந்திரா மறைந்த போது துடிதுடித்து அழுத இராசீவ் காந்தி அன்னை பூபதி மரணத்தோடு போராடியது தெரிந்தும் வாய் திறக்க மறுத்தார். தமிழ்க் குலத்தின் பெண்களை கற்பழித்தும், கொலை செய்தும், அன்னை பூபதியை சாகடித்தும் மகிழ்ந்த இந்திய இராணுவத்தை ஓட ஓட விரட்டியடித்த பெருமை மேதகு பிரபாகரனை மட்டுமே சேரும். அன்னை பூபதியின் தமிழீழக் கனவு மெய்ப்பட அவரின் பிறந்த நாளில் சூளுரைப்போம்!

– கதிர்நிலவன்

Leave a Response