நாம் தமிழர் கட்சி மற்றும் இலட்சுமி மக்கள் சேவை வழங்கும் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் அதிகாரப்பூர்வமான ஓட்டுநர் சேர்க்கையை கடந்த 24-06-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலியை மக்கள் பயன்பாட்டிற்காக 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து ‘உலா’ வாடகை மகிழுந்து சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சமீபகாலமாக மகிழுந்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கார்ப்பரேட் நிறுவனங்களின் தரகு முறையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கான செயலியை எந்தவித தரகுமுறை (Brokerage), சேவை இலக்கு (Daily Target) போன்றவை தவிர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள வாடகை மகிழுந்து, தானி ஓட்டுநர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான நேரடி கட்டண நிர்ணயம் செய்யப்படுவதால் மிகக்குறைந்த சேவை கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
நெருக்கடி நேரக் கட்டணம் (PEAK TIME CHARGE), இரத்து செய்தலுக்கான கட்டணம் (CANCELATION FEE) மற்றும் இதர மறைமுகக் கட்டணங்கள் இல்லை. நேரடியாக மக்கள் பயணக் கட்டணத்தை ஓட்டுநரிடமே செலுத்தலாம். ‘உலா” செயலி இன்று (28-10-2018) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
என்று சீமான் கூறினார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகளின் சுருக்கம்….
இலங்கை புதிய பிரதமர் ராஜபக்சே பதவியேற்பில் இந்திய அணுகுமுறை தோல்வி, சீனாவிற்கு வெற்றி கிடைத்துள்ளது
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்பட்டது ஜனநாயகப் படுகொலை, 20 தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது.
மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதால் ஏற்கனவே ஆண்ட, ஆளுகிற கட்சிகளோடு கூட்டணி சேராமல் வெற்றி-தோல்வி குறித்து கவலைப்படாமல் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம். ஒருநாள் நிச்சயம் வெல்வோம்.
#Metoo ஆத்தூர் ராஜலட்சுமி போன்ற சாமானிய பெண்களுக்குப் பயன்படவில்லை.
இராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து பேசும் எந்தக்கட்சியும் ஆட்சியில் இருக்கும்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கையில் தமிழ்த் தேசியத்தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகக் கருத முடியாது எனவும், புதிய அமைப்புகளால் நோக்கம் வலுப்பெற்றிருக்கிறது
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.