நோட்டா அரசியல்படமா? அரசியல்வாதிகள் படமா?

ஒருநாள் முதல்வனே அத்தனை விசயங்களைச் செய்த கதையைச் சொன்ன சினிமாவில் அந்த நாற்காலி 15 நாட்களுக்குக் கிடைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்ல வருகிறது இந்தப் படம். தற்காலிக சிறைவாசம் செல்லும் முதலமைச்சர் தனது மகனை இடைக்காலப் பொறுப்பேற்க வைப்பதில் தொடங்குகிற படம், தமிழகம் சந்தித்த சில காட்சிகளைத் தொகுத்துக் கூறுகிறது. அப்படித் தொகுத்துக் காட்டுவதில் ஓரிரு காட்சிகள் (அமைச்சர்மார்களும் எம்எல்ஏக்களும் அரை உடம்பாய் வளைந்து பணிந்து நிற்பது…) சிரிக்க வைக்கின்றன, ஓரிரு காட்சிகள் (மழைவெள்ளத்திலிருந்து மக்களை மீட்க இளைஞர்கள் படை திரட்டப்படுவது…) யோசிக்க வைக்கின்றன.

இந்த அளவுக்கு சமகால தமிழக அரசியலின் நேரடி நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திய கதையில், சமகால தமிழக அரசியலில் பின்னாலிருந்து ஆட்டுவிக்கிற பொம்லாட்டக் கயிறு பற்றிய குறிப்பு கூட இல்லை. இயற்கையையும் மக்கள் உரிமைகளையும் பாதுகாக்கப் போராடும் “சமூகவிரோதிகள்” பற்றிய பேச்சு கூட இல்லை. இது எப்படி சமகால அரசியல் பேசுகிற சினிமாவாகும்?

அடியார் கூட்டத்தை மட்டுமின்றி அடியாள் கூட்டத்தையும் வைத்திருக்கிற ஒரு ஆன்மீக குரு வருகிறார். சரிதான், அந்தக் கயிறு பற்றிய மறைமுகக் குறிப்புதான் போலிருக்கிறது என்று நினைத்தால், வெளிநாட்டு வங்கி, பதுக்கப்பட்டுள்ள பணம், பினாமி ஏற்பாடு, கைப்பற்றும் சதி… என்று எங்கோ தாவிவிடுகிறார்கள். கார்ப்பரேட் சாமியார்களின் சாந்த முகமூடியைக் கொஞ்சம் திறந்துகாட்டியிருப்பதை வேண்டுமானால் கதாசிரியர் ஷான் கருப்பசாமியின் ஒரு துணிச்சல் முயற்சி எனலாம்.

அரசியல் சித்தரிப்பின் மேற்படி முழுமையின்மைகள் போலவே கதாநாயகனின் தங்கை, பத்திரிகையாளரின் மகள் என்ற முழுமையின்மைகளும் இருக்கின்றன. விறுவிறுப்பான திருப்பங்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு அப்படியே விடப்படுகின்றன. பத்திரிகையாளர் தனது அறை நண்பர் பற்றி வெளிப்படுத்துகிற முன்னாள் கதை இந்த இடைவெளிகளைக் கொஞ்சம் நிரப்ப முயல்கிறது.

நாயகனின் தீரத்தனங்களை அடிதடி சண்டைகளாக அல்லாமல் புத்திக்கூர்மையாக அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதுதான். ஆனாலும், சேர்ந்து சிந்தித்து, கொள்கை வழிப்படி செயல்படுகிற கூட்டுத்தலைமைக்கு மாறாக, தனிமனிதத் தலைமையே மாற்று என்கிற இவ்வகைப் படங்களின் பாதையில்தான் இதுவும் செல்கிறது.

விஜய் தேவரகொண்டா தமிழ் சினிமாவுக்குள் தனது வருகைப்பதிவை எளிதாகச் செய்திருக்கிறார். சத்யராஜ், நாசர் இருவரும் வெகு இயல்பாகத் தங்கள் பங்கைச் செலுத்தியிருப்பதில் அவர்களது அனுபவ வளம் தெரிகிறது. இத்தகைய நடிப்பையும் ஒளிப்பதிவு, இசைப்பதிவு போன்ற இதர நுட்பங்களையும் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.

அரசியல் சினிமா என்பது அரசியல்வாதிகள் பற்றிய சினிமாவாக இருக்க வேண்டும் என்பதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையேறிகளும் பரியேறும் பெருமாள்களும் அரசியல்தானே பேசுகிறார்கள்?

-குமரேசன்

Leave a Response