
95 வருடங்களில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வு. ஐம்பது ஆண்டுகள் திமுக தலைவர். தமிழக முதல்வராக 5 முறை, நீண்டகாலம் சட்டப்பேரவை உறுப்பினர், அரசியல் அனுபவம், நிர்வாகத்திறமைக்கு பெயர் பெற்ற கலைஞர்கருணாநிதி தமிழக அரசியலின் பிரதான சக்தியாக விளங்குபவர்.
இரண்டு நாட்களாக இந்திய அரசியல் அவரைச் சுற்றியே இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கும், பின்னர் காவேரி மருத்துவமனைக்கும் வந்தவண்ணம் உள்ளனர்.
தமிழகம் தாண்டி இந்திய ஒன்றிய அரசியலிலும் திமுக கால்பதித்ததன் மூலம் தவிர்க்க இயலாத தலைவராக இருந்த கலைஞர்கருணாநிதி வட இந்தியாவின் பல தலைவர்களுக்கு நண்பர்.
இதனால் அவரது உடல் நலத்தை விசாரிக்க தமிழகம் தாண்டி அகில இந்தியாவிலிருந்தும் தலைவர்கள் விசாரிக்க வந்தவண்ணம் உள்ளனர்.
ஓபிஎஸ், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, டிடிவி தினகரன், திவாகரன், பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், நல்லகண்ணு, கே.பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் குலாம்நபி ஆசாத் மற்றும் இடதுசாரி தலைவர்கள் என பலர் தேடி வந்து நலம் விசாரிக்கின்றனர்.
பிரதமர், குடியரசும் தலைவர், தில்லி, கேரளம் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் அவர் குறித்து சமூகவலை தளங்களில் பதிவிடுகின்றனர்.
மொத்தத்தில் இந்தியாவே இன்று காவேரி மருத்துவமனையைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.


