கமலின் அரசியலுக்கு பிக்பாஸ் உதவியா? உபத்திரவமா?

நடிகர் கமல், விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துநராக முன்னின்று நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி, பிக்பாஸ் 1 போன்று சுவாரசியமாகவில்லை என்ற பொதுவானதொரு எண்ணம் பார்வையாளர்களிடம் மேலோங்கி வருகிறது.

நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்களும் உண்மையாக நடந்து கொள்ளாமல் முகமூடியணிந்து, மக்களை எது கவரும் என்று கணக்கிட்டு அதற்கமைய நடந்து கொள்கிறார்கள் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு, நிகழ்ச்சி நடத்துநர் கமலின் கையில் முழுமையாக இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்கும் வீட்டில் இருப்பவர்கள் ஒருவகைப் பாத்திரத்தை ஆற்ற, நிகழ்ச்சி நடத்துநராக அவர் வேறொரு வகைப் பாத்திரத்தை ஆற்றுகிறார்.

நிகழ்ச்சியில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் தொடர்பாக கமல் ஆலோசனை வழங்க முடியும். அதேவேளை அவற்றை முழுமையாகத் தீர்மானிப்பதற்குரிய பொறுப்போ அல்லது நேரமோ அவரிடம் இல்லை. தனது கட்டுப்பாட்டினுள் முழுமையாக இல்லாத நிகழ்ச்சியின் முகமாக அவர் இருப்பது அவரது அரசியல் வாழ்வுக்கு சாதகமானதா? அல்லது பாதகமானதா? இதுவே இச் சிறு கட்டுரையின் மையப்பொருள்.

பிக்பாஸ் 1 இன் முகமாக கமல் இருந்தபோது அவர் தனது அரசியல் அக்கறையினை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர் ஒரு நடிகர் என்ற நிலையிலேயே இருந்தார்.

பிக்பாஸ் 2 இன் போது, மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் அமைப்பின் தலைவராகவும் கமல் இருக்கிறார். இதனால் கமல் இந் நிகழ்ச்சியில் பேசும் அரசியல் அவரின் கட்சி அரசியலாகப் பார்க்கப்படும் நிலைமைகள் உள்ளன.

இது விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கும் கவனத்துக்குரிய விடயமாகவே இருக்கும். பிக்பாஸ் 2 இனை கமல் தனது கட்சியின் அரசியல் பிரசார மேடையாகப் பயன்படுத்த முயல்கிறார் என்ற எண்ணம் ஏற்படாதவொரு எல்லைக்குள் நின்று அரசியல் பேசுமாறு கமல் தொலைக்காட்சியால் அறிவுறுத்தப்பட்டிருப்பார்.

கமலும் நிகழ்ச்சியின் வரையறைக்குள் நின்றே மக்களுடன் அரசியல் பேசமுடியும் என்பதனை உணர்ந்திருக்கிறார் என்பதனை அவரது செவ்விகளில் அவர் வெளிப்படுத்தும் கருத்துக்களில் இருந்து உணர முடிகிறது.

பிக்பாஸ் 2 இலும் கமல் வாய்ப்பு வரும் போதெல்லாம் அரசியல் பேசுகிறார். சில அரசியல் விடயங்களை முன்கூட்டியே திட்டமிட்டும் பேசுகிறார்.

நிகழ்ச்சியில் கமல் பேசும் அரசியல் அரசியல் விமர்சகர் ஒருவர் வெளிப்படுத்தக்கூடிய கருத்துக்களின் எல்லைகளுக்குள்ளேயே நிற்கின்றன.

இந்த அரசியல் ஓரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவரின் கொள்கை விளக்கத்துக்குப் போதுமானதல்ல. இதனை கமல் புரிந்தே வைத்திருக்கிறார். அரசியற்பிரச்சினைகள் தொடர்பான கவனத்தை எழுப்புவதற்கு பிக்பாஸ் மேடையைப் பயன்படுத்த கமல் முயல்கிறார் எனத் தெரிகிறது.

அரசியற்பிரச்சினைகள் குறித்த தனது கட்சியின் நிலைப்பாடுகளை கட்சி எற்படுத்தும் வேறு அரங்குகளில் அவர் பேசக்கூடும். பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னைப் பயன்படுத்துகிறது, அதனை மக்களுடன் உரையாடுவதற்காக நான் பயன்படுத்துகிறேன்» எனக் கமல் கூறியிருப்பதனையும் இப் பின்னணியில் நாம் புரிந்து கொள்ள முடியும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் பல விடயங்கள் மக்களைப் பொறுத்தவரை சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. இச் சர்ச்சைகளைக் கையாள்வதில் நிகழ்ச்சியின் முகமாக நின்று செயற்படுவது சவால் மிக்கவொரு பணியாகவே இருக்கும்.

பல பிற்போக்கு அம்சங்களும் நிகழ்ச்சியின் பகுதியாக இடம் பெறுகின்றன. ஜாதி வேறுபாடுகள் துல்லியமாக வெளிப்படாவிட்டாலும் வர்க்க வேறுபாடுகள் வெளிப்படுகின்றன.

பண்பாட்டு முரண்பாடுகள் மிகத் தெளிவாக வெளியே தெரிகின்றன. இவற்றைக் கையாளவதில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல், நடிகர் கமலை விட மேலே வருகிறார்.

உதாரணமாக இளம் பெண்கள் யாசிகா, ஜஸ்வர்யா போன்றோரின் உடை, அவர்களும் மகத், ஸாரிக் போன்ற இளம் ஆண்களும் பழகும் விதம் போன்றவை குறித்து பண்பாடு சார்ந்த அக்கறை பலருக்கும் எழுகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொன்னம்பலம் பண்பாட்டுக் காவலராகப் பலருக்குத் தெரகிறார். உடை, மற்றும் பழகும் விதம் தனிமனித சுதந்திரத்தின்பாற்பட்டதா, அல்லது ‘பண்பாட்டின்’ எல்லைக்குட்பட்டதா என்பதனை விவாதிக்க முடியும்.

நடிகர் கமல் இந்த விவாதத்தைச் சற்றுச் சுதந்திரமாக முன்னெடுத்திருப்பார். பிக்பாஸ் 2 கமல் அரசியல் கட்சித் தலைவராக இருப்பதால் மக்களுக்கு பிடிக்கும் வகையில் அவரும் நடந்து கொள்ள முயல்வதாகத் தெரிகிறது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் உடை, மற்றும் பழகும் விதங்களில் எல்லை தேவை என்பதனை கமல் வெளிப்படுத்துகிறார். இத்தகைய மக்கள் மனதைக் கவரக்கூடிய விடயங்களை அவர் பேசுவதும் வெளிப்படுத்துவதும் அவரது அரசியலுக்கு உதவக்கூடும்.

இதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் பல்வேறு விடயங்களுக்கு கமலும் ஏதோவொரு வகையில் பொறுப்பாக்கப்படக்கூடிய நிலை உள்ளமை அவரது அரசியலுக்கு உபத்திரமாக அமையும் நிலைமைகளும் உள்ளன.

இவற்றில் முக்கியமானது நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்படும் முறை குறித்த விடயம். மக்கள் விருப்புக்கமைய, மக்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே போட்டியாளர்கள் காப்பாற்றப்படுவதும், வெளியேற்றப்படுவதும் நடைபெறுவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறப்படுகிறது. கமலும் அதனை வழிமொழிந்து நிகழ்ச்சியில் உறுதிப்படுத்துகிறார்.

ஆனால் கடந்த இரு வாரங்களில் நித்யாவும், ரம்யாவும் வெளியேற்றப்பட்டமை மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் அமையவில்லை என பரவலான கருத்துகள் வெளிப்படுகின்றன. விகடன் இணையத்தளத்தின் கருத்துக்கணிப்பு வாக்கிலும் 80 வீதத்துக்கும் மேற்பட்டவர்கள், மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் போட்டியாளர் வெளியேற்றம் நடைபெறவில்லை எனக் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் வெளியேற்றம் குறித்த தனது முடிவுகளை நிகழ்ச்சியின் சுவாரசியத்துக்காகவும், வர்த்தக நோக்கத்துக்காகவும் எடுக்கக்கூடும். அதனை மக்கள் தலையிலும் போடக்கூடும்.

இது சாதாரண நடிகர் கமல் நிகழ்ச்சியின் முகமாக இருக்கும்போது பெரிய பாதிப்பை அவருக்கு ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால், மக்கள் நீதி மய்யம் என்று தனது அரசியல் கட்சிக்கு பெயரை வைத்துக் கொண்டு, மக்கள் அதிகாரம், சமூக நீதி என்று ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு, மறு பக்கத்தில் மக்கள் தீர்ப்பை அவமதித்து எடுக்கப்படும் முடிவுகளை மக்கள் தீர்ப்பாக கமல் நிகழ்ச்சியில் அறிவிப்பது கமல் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்காதா? மக்கள் கமலை போலி என எண்ண மாட்டார்களா?

கமலின் அரசியலுக்கு பிக்பாஸ் உதவுகிறதா? உபத்திரமாகிறதா? என்பது குறித்து கமல் சற்றுச் சிந்திப்பது அவருக்கு நல்லது.

– அரசு மாதவன்

Leave a Response