
செய்யும் தொழிலே தெய்வம் என்னும் சொல்லுக்கேற்ப வாழும் ஒரு மனிதரைப் பற்றி இயக்குநர் பொன்.சுதா எழுதியுள்ள பதிவு…..
ஆதம்பாக்கத்தின் அந்த பரபரப்பான சாலையில் இருசக்கர வாகனத்தில் போகும் போது ஒரு முறை அந்தக் காட்சி கண்களைக் கவர்ந்தது.
ஒரு சிறிய நடைமேடையின் செருப்புத் தைக்கும் கடை.
தைத்துக் கொண்டிருந்தவர் மடிப்புக் கலையாத வெள்ளைக் கதர் சட்டை அணிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். கீழுடையாக வெண்மை மாறாத ஒரு லுங்கி.
அது மட்டுமல்ல கழுத்தில் இரண்டு கனமான தங்கச் சங்கிலிகள். ஒரு கையில் கைகளில் பட்டையான தங்க பிரேஸ் லெட், ஒரு தங்கக் காப்பு , விரல்களில் பெரிய தங்க மோதிரம். மறு கையில் தங்க நிறக் கடிகாரம். அந்தக் கையின் விரல்களிலும் மோதிரம்.
நல்ல பெரிய செல்போன். சட்டையின் பேனா.
அழகாய் சவரம் செய்யப்பட்ட முகத்துடனான 60 வயது மதிக்கத் தக்க ஒருவர்.
பின் எப்போது அந்த வழியில் போனாலும் அவரைக் கண்கள் தேடும். அவர் கம்பீரமாய் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். தன்னபிக்கை மிக்க முன்னுதாரண மனிதர்களைப் பார்க்கும் போதான பரசவம் கிடைக்கும். அவரிடம் பேச நினைப்பேன் ஆனால் கடந்து போய் கொண்டே இருப்பேன்.
இதே போல் சில கதாபாத்திரங்கள் எப்போதும் கண்ணில் பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
இன்றும் அதே வழியில் போய் கொண்டிருந்தேன். ஆட்கள் இல்லாத கடையில் ஓய்வாக அதே கம்பீரத்துடன் அமர்ந்திருந்தார் அவர் .
சட்டென வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டு அவரிடம் போய் விட்டேன்.
அவர் பெயர் ஜேக்கப். இது எனக்குக் குடும்பத் தொழில் என்று பெருமையாகச் சொன்னார்.
பத்தாவது வரை படித்திருக்கும் அவர் வேறு வேலைகளுக்கு முயற்சித்தே இல்லை என்று சொன்னார். இது எனக்கு பிடித்த வேலை என்றார்.
வெள்ளை சட்டையில் பணி புரிவது பற்றி கேட்ட போது, சிறுவயதில் இருந்து அப்படித் தான் என்றார். அவரது தந்தையும் இதே போலத் தான் ஆடை அணிந்து கொள்வார் என்று குறிப்பிட்டார்.
அரசியலில் ஈடுபாடு உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தார். அவரது தந்தை தி.மு.க வில் பதவியில் இருந்தாதகவும், 80 களிலேயே 1 கோடி ரூபாயை அரசியலில் ஈடுபட்டதால் இழந்ததாகச் சொன்னார்.
குடும்பத்தில் அவர் தான் மூத்தவர். அவரது சகோதரர்கள் யாரும் இந்தத் தொழிலில் இல்லை.
ஜேக்கப் அண்ணனுக்கு ஒரு மகன். மகன் பொறியியல் பட்டம் பெற்று நல்ல வேலையில் இருக்கிறார்.
வாழ்வை பெருமையுடனும் பெருமிதத்துடன் கம்பீரத்துடனும் வாழும் அவருடன் பேசியது நல் அனுபவம்.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.
