கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம்

இந்துத்துவாவில் கடைந்தெடுத்த சிங்கம் என்று காட்டாறு முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விமர்சனம்….

ஜாதியை நிலைநிறுத்தும் ரேக்ளாபந்தயப் போதையுடன் படம் தொடங்குகிறது. கதாநாயகனின் சகோதரிகள் எல்லோருக்கும் வேலுநாச்சியார், சம்யுக்தா, பத்மாவதி, ஜான்சி என ராணிகளின் பெயர் வைக்கப்படுகிறது. கதாநாயகியின் பெயர் மட்டும் ‘கண்ணுக்கினியாள்’.

உலகத்தில் எந்தப் பெண் வேண்டுமானாலும் ராணியாக இருக்கலாம். போராளியாகவும் இருக்கலாம். மனைவி மட்டும் கண்ணுக்கு இனியவளாக மட்டுமே இருக்க வேண்டும். அறிவுக்கினியாள், அறிவுக்கொடி, அறிவு என்றெல்லாம் மனைவி கேரக்டருக்குப் பெயர்கூட வைக்கக்கூடாது.

மற்ற பெண்கள் என்ன ட்ரெஸ் வேண்டுமானாலும் போடலாம். மனைவியும் கூட திருமணத்திற்கு முன்பு என்ன ட்ரெஸ் வேண்டுமானாலும் அணியலாம். ‘மனைவி’ ஆகிவிட்டால், சேலை, கே.ஆர்.விஜயா பொட்டு, மல்லிகை, மஞ்சள், ஆறடிக்கூந்தல் என்ற காம்போவுக்குள் அடங்கிவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் எல்லா போராளி இயக்குநர்களும் தெளிவாக இருக்கின்றனர்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மண் கலயத்தில் தேநீர் கொடுக்கிறார்கள். வீட்டிற்கு வருபவர்களுக்குத் தாங்கள் புழங்கும் டம்ளர்களில் டீ கொடுக்காமல், யூஸ் அண்ட் த்ரோ போல மண் கலயத்தில் கொடுப்பது நவீனத் தீண்டாமை.

இயற்கை விவசாயம் செய்யும் நிலஉடமையாளரின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசாத தலித் வேலைக்காரர் வருகிறார். எத்தனை காலத்துக்கு இப்படி தலித் மக்களை அடிமைகளாக மட்டுமே காட்டிக் கொண்டிருப்பீர்கள்? அவருடைய மகனுக்காக, சொந்த ஜாதிக்காரனை எதிர்க்கிறாராம் கார்த்தி. என்னுடைய அடிமைக்கு வேறு எவனும் தொந்தரவு தரக்கூடாது என்பது தான் இதன் பொருள்.

ஆணவக் கொலைக்கு எதிராகப் படம் பேசுகிறது என்று ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. எதற்கு எதிராகவும் ‘பேசுவது’ என்பது சிக்கல் இல்லாதது.

ஆணவக்கொலைக்கு எதிராகப் பேசும் கடைக்குட்டிச் சிங்கம், இந்தப் படத்திலும், தனது வாழ்க்கையிலும் செய்வது, செய்தது சொந்த ஜாதித் திருமணம். தான்.
“சொத்து சேர்ப்பது சேமிப்பு அல்ல; சொந்தத்தைச் சேர்ப்பதுதான் சேமிப்பு” என்பது தான் படத்தின் போதனை. இவர்கள் கூறும் சொந்தம் என்பது ஜாதி சொந்தம் தான். அந்த ஜாதிச் சொந்தம், குடும்பம் என்ற அமைப்பு, குலதெய்வம், காதுகுத்து, தாய்மாமன், கூட்டுக்குடும்பம், சீர் செனத்திகள், என்று இப்படத்தில் பெருமைப்படுத்தப்படும் இந்து மத மற்றும் தமிழ்ப் பண்பாடுகள் தான் ஆணவக் கொலைகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. இந்தப் பண்பாடுகளுக்கு எதிராக ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாத இயக்குநர், ஆணவக்கொலையை எதிர்க்கிறாராம்.

ஆனால், இப்போ இதுதான் ட்ரெண்ட். நம்மாழ்வார், ஜல்லிக்கட்டு, ஆர்கானிக், வேட்டி, சேலைப் பண்பாட்டுப் பந்தாக்கள், அப்படியே சிறிதளவு தீண்டாமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குலதெய்வம், நாட்டார்தெய்வம், காதுகுத்து, பூப்புனிதநீராட்டுவிழா, தாய்மாமன், கூட்டுக்குடும்பம், நிலமே தெய்வம், மாடு தான் கடவுள், பசுமை விகடன், ஜாதி ஒழியணும்னா, ஜாதிச் சங்கங்கள் ஒழிய வேண்டும். நாடு வளரணும்னா அரசியல்வாதிகள் ஒழிய வேண்டும். ஊழல் ஒழிய வேண்டும்….

இப்படி எல்லாத்தையும் கலக்கி அடிச்சா..அதுதான் இன்றைய மய்யம், சிஸ்டம், தமிழ்த்தேசியம், தற்சார்பு, இந்துத்துவா, பொதுவுடைமை. (இந்தியாவில் மட்டும்) இந்த முற்போக்குப் பொதுப்புத்தியைப் பணமாக்கும் படவரிசையில் புதிய வரவுதான் கடைக்குட்டிச்சிங்கம்.

Leave a Response