ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றன.
இந்நிலையில், 2-வது சுற்று ஆட்டங்கள் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ஜூலை 1 அன்று நடந்த முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ரஷ்யா அணிகள் மோதின. இதில் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி ரஷ்ய அணி காலிறுதிக்கு முன்னேறியது.
அடுத்ததாக, இரவு 11.30 மணிக்கு நிஸ்னி நவ்கோராட் ஸ்டேடியத்தில் தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில், லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை வெற்றி கொண்ட குரோஷியா அணி தனது 2-வது சுற்றில் டென்மார்க் அணியை எதிர் கொண்டது.
பரபரப்பாக துவங்கிய ஆட்டத்தில் முதல் நிமிடத்திலே டென்மார்க் அணியின் சார்பில் மேத்யஸ் ஜோர்ஜென்சன் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 4 நிமிடத்தில் குரோஷியா வீரர் மேரியோ 1 கோல் அடித்து அசத்தினார். அதன்பிறகு நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணியினரும் மேலும் கோல் ஏதும் அடிக்காததால் முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.
அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணியினராலும் கோல் அடிக்க முடியவில்லை. கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை குரோஷியா வீரர் லூகா வீணடித்தார். இதனால் இந்த ஆட்டத்திலும் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையே பின்பற்றப்பட்டது. அதில் குரோஷியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன் மூலம் டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றிபெற்றது.