தூத்துக்குடியில் வெளியிடப்பட்ட மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO) சுருக்க அறிக்கை:
தூத்துக்குடி, மே 28, 2018
1.துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத் தாசில்தார்கள் சுடுவதற்கு ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளதாக FIR தயாரிக்கப்பட்டுள்ளது. 22-05-2018 ல் தூத்துக்குடி (சிப்காட்) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 191/2018) தனி துணைவட்டாட்சியர் (தேர்தல்) சேகர் என்பவர் சுடுவதற்குத் தான் ஆணையிட்டதாகக் கூறியுள்ளார். அதே நாளில் தூத்துக்குடி (வடக்கு) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 219/ 2018) துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவர் சுட ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளார். மே23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIRl (எண் 312/2018) சுடுவதற்கு ஆணையிட்டடது தூத்துக்குடி கோட்டக் கலால் அலுவலர் சௌ. சந்திரன். நூறு நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் திட்டமிட்ட ஒரு பேரணியில், மக்கள் தடையை மீறிப் பேரணி நடத்திக் கைதாவது என முடிவு செய்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாமல் போனது என்பதெல்லாம் மேல்மட்டத்தில் முன்கூடித் திட்டமிட்ட ஒரு செயல் என நாங்கள் கருதுகிறோம்.
2. கார்பொரேட் தொழில் முயற்சிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராடி அவற்றை நிறுத்துகிற முயற்சிகள் இனி எங்கும் ஏற்படக் கூடாது எனப் பாடம் ஒன்றைக் கற்பிக்கும் நோக்குடன் இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. அப்போது பதவியிலிருந்த ஆட்சியர் அன்று தலைமையகத்தில் இல்லாமல் போனது என்பதெல்லாம் இப்படியான துப்பாக்கிச் சூட்டை ஒட்டி முன் கூட்டித் திட்டமிட்ட நடவடிக்கைதான். மத்திய அரசின் ஒப்புதலும் இதற்கு இருந்துள்ளது. தேவையானால் படைகளை அனுப்பத் தாங்கள் தயார் என மத்திய உள்துறைச் செயலர் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.
3. அந்த வகையிலேயே மே 22 அன்று காலையில் கூடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்கமான போலீஸ் சீருடையில் இல்லாமல் வேறு சீருடையுடன் கூடிய, மக்களைக் கொலை செய்வதற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட, படையினர் அங்கு ஸ்னிப்பர் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் மக்களைக் குறி பார்த்துச் சுட்டுள்ளனர், மக்களைக் கண்காணிப்பதற்கெனக் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களை ஏதோ எதிரி நாட்டு ஆயுதம் தாங்கிய படையினர் என்பதைப் போலக் கையாண்டுள்ளனர்.
4. போலீஸ் கையேட்டிலுள்ள துப்பாக்கிப் பிரயோகத்திற்கான முன்னெச்சரிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் இப்படிப் 13 பேர்கள் இன்று கொல்லப்பட்டுள்ளனர். சிலர் நிரந்தர முடமாக்கப்பட்டுள்ளனர். அப்பாவிகள் வீடுகளில் சென்று கைது செய்யப்பட்டு யாருக்கும் சொல்லாமல் வல்லநாடு காவல்துறை பயிற்சியகத்தில் அடைத்து வைத்துத் துன்புறுத்தப்ப பட்டுள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு விளக்கம் கோரியபோது பதிலளிக்க இயலாமல் திணறியுள்ளனர். நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்னரே அவர்கள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
5. மக்கள் மத்தியில் சீருடை இல்லாத காவலர்கள் ஏராளமானோர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கல்லெறிதல், வாகனங்களுக்குத் தீ மூட்டல் முதலானவற்றில் இவர்களின் பங்கு உள்ளது என மக்கள் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. ஆட்சியர் அலுவலகம் உள்ளே மக்கள் நுழைவதற்கு முன்பாகவே தீப்புகை எழும்பியுள்ளது..
6. மக்கள் முன்கூட்டித் திட்டமிட்டுக் கலவரம் செய்யும் நோக்கில் சென்றனர் என்கிற குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படிக் கலவரம் செய்யச் செல்கிறவர்கள் பிள்ளை குட்டிகளுடன் சென்றிருக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக. கொடூரமாக மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது பள்ளி மாணவி ஸ்னோலின் தன்குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். ஸ்னோலினுடைய தாய் மட்டுமின்றி அவரது அண்ணன் மனைவி தனது 2 வயது மற்றும் 6 மாதக் குழந்தையுடன் அங்கு வந்துள்ளார்.
7. தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் மக்களுடன் கலந்து உள்ளே சென்றனர் என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. “மக்கள் அதிகாரம்” என்கிற அமைப்பின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்ற போதிலும் அவர்கள் தீவிரவாதிகளோ ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களோ அல்லர். அவர்கள் மிகவும் வெளிப்படையாக இயங்கி சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் ஒரு அமைப்பினர். அவர்களில் ஒருவரான தமிழரசனைக் குறி பார்த்துப் போலீசார் சுட்டுள்ளனர். தீவிரவாதிகள் கூட்டத்தில் இருந்தனர் எனச் சொல்வதற்காகவே அப்படி அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
8. திரேஸ்புரத்தில் மாலை மூன்று மணி அளவில் அருகிலுள்ள மகள் வீட்டிற்கு மீன் விற்றுக்கொண்டிருந்த ஜான்சி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று 5 பேர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அவர்களின் குடும்பத்தார்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளபோது அவர் பெயர் வினிதா என்று குறிப்பிடப் பட்டுள்ளது (தினத்தந்தி, நெல்லைப் பதிப்பு, 28-05-2018, பக்.2). காவல்துறையின் ஏராளமான முறை மீறல்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மக்கள் கல்லெறிந்தது, அரசுச் சொத்துக்களை எரித்தது முதலான குற்றச்சாட்டுகள் ஆக்கியவற்றிற்கான FIR ம், காவல்துறையினர் சுட்டுக் கொன்றதற்கான IPC 176 பிரிவிலான FIR ம் தனித் தனியே போடப் பட்டிருக்க வேண்டும். இப்படியான போளீஸ் துப்பாக்கிச் சூடுகளில் மக்கள் கொல்லப்படும்போது அந்த அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற ஆணை நிறைவேற்றப்பட வேண்டும்
9. இரண்டு நாள் முன்னர் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் கடலோர மக்களுக்கு எனத் தனியாகவும், வணிகர்களுக்கென தனியாகவும் அமைதிக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இது இன்று போராடும் மக்களை கிறிஸ்தவர்கள் எனவும் இந்துக்கள் எனவும் பிரிக்கும் மதவாத சக்திகளுக்குத் துணை போகும் ஒரு முயற்சி. எல்லா தரப்பு மக்களும் தம்மைப் பாதிக்கும் ஒன்றை எதிர்த்து ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அந்த ஒற்றுமையைச் சிதைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இம்முயற்சியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
10. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூ இழப்பீடு தர வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரின் தகுதிக்கு ஏற்ற நிரந்தர அரசுப் பணி அளிக்கப்பட வேண்டும். காயம்பட்டவர்களுக்கு ரூ 20 இலட்சம் இழப்பீடு அளிப்பதோடு முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். இது தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும். சம்பவம் அன்று பதவியில் இருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டு பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஸ்னிப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது, சீருடை இல்லாதோர் சுடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, குறிப்பான இயக்கத்தினர் குறி வத்துச் சுடப்பட்டுள்ளனர் எனும் குற்றச்சாட்டு ஆகியன விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
11.எல்லாவற்றிற்கும் காரணமான ஸ்டெர்லைட் ஆலை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூடப்பட வேண்டும்,
12. தூத்துக்குடி அரசுமருத்துவமனை மருத்துவர்கள் வழக்குரைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
_________________________________________
மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO)
__________________________________________
பேரா.அ.மார்க்ஸ், ரெனி அய்லின், மூத்த வழக்குரிஞர் ப.பா.மோகன், வழக்குரைஞர் என்.எம்.ஷாஜகான், வழக்குரைஞர் சென்னியப்பன், வழக்குரிஞர் உதயணன், நெல்லை அஹமது நவவி, கடலூர் இரா.பாபு,வழ. என்.கே நஜ்முதீன், தூத்துக்குடி அப்துல்காதர், வழ. மதுரை அப்துல் காதர், வழ. பி.பொன்ராஜ்
தேசிய மனித உரிமை அமைப்புகளுக்கான கூட்டமைப்பு, தமிழ் மாநில அமைப்பு, (National Confederation of Human Rights Organisations (NCHRO), H.O: New Delhi) (தொடர்புக்கு: என்.எம்.ஷாஜகான், 18, ஏ, சுங்கம் பள்ளிவாசல் தெரு,மதுரை-01 09443977943)