
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அண்ணன் தங்கையைத் தூக்கிக்கொண்டு பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு வந்து வேலை செய்து காப்பாற்றுகிறான் அண்ணன்.
கங்காரு போல தன் தங்கையை முதுகிலேயே சுமந்துகொண்டு வேலை செய்கிறான். தங்கை வளர்ந்து ஆளானதும் அவளுக்குக் காதல் வருகிறது. காதலனையே மணமகனாகப் பேசிமுடிக்கிறார் அண்ணன். ஆனால் திடீரென காதலன் இறந்துவிட திருமணம் தடைபடுகிறது. அதன்பின் இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமணநிச்சயம் நடக்கிறது. நிச்சயத்துக்குப் பிறகு அந்த மாப்பிள்ளையும் இறந்துபோகிறார்.
மூன்றாவதாக ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் செய்துவிடுகிறார்கள். அந்த மாப்பிள்ளையையும் கொலை செய்ய முயற்சி நடக்கிறது. அதன்பின்னர்தான் ஏற்கெனவே இறந்தவர்களும் விபத்தில் இறக்கவில்லை கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. யார் அந்தக்கொலைகளைச் செய்தார்கள் என்பதை விளக்குவதுதான் படம்.
நாயகன் அர்ஜூனாவை முரடனாகக் காட்டுவது என்று முடிவு செய்துவிட்டதால் எந்நேரமும் விறைப்பாகவே அலைகிறார். கடைசிவரை அவர் இயல்பாகவே இல்லை. அதற்குக் கடைசியில் மருத்துவரீதியான ஒரு விளக்கம் வேறு சொல்லியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் இப்படி ஏதாவதொரு நோயின் பெயரைச் சொன்னாலே மக்கள் சிரிக்கத்தொடங்கிவிடுகிறார்கள் என்பதை உணராமல் கதை எழுதியிருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்திலேயே கங்காரு என்று சொன்னவனைப் போட்டு அடித்துத்துவைக்கிறார். அது எதனால்? என்று கடைசிவரை புரியவேயில்லை. இத்தனைக்கும் கங்காரு என்பது உன்னைப் பெருமைப்படுத்துவதுதான் என்று விளக்கம் வேறு சொல்லியிருக்கிறார்கள்.
தங்கையாக நடித்திருக்கும் பிரியங்கா, தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். படம் முழுவதும் வருகிற தம்பிராமய்யாவும் தனக்கான வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். நாயகன் அர்ஜூனாவை ஒருதலையாகக் காதலிக்கிற வேடத்தில் வர்ஷா அஸ்வதி நடித்திருக்கிறார்.சந்தோசமாக இருக்கவேண்டிய காட்சிகளில்கூட எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கிறார்.
படத்தில் வருகிற காவல்துறைஅதிகாரி வேடத்தில் இயக்குநர் சாமியே நடித்திருக்கிறார். மிகவும் இயல்பாக இருக்கிறது.
கலாபவன்மணி மற்றும் அவருடைய கூட்டாளிகள் எல்லாம் நடக்கும் நிகழ்வுகளுக்கு அவர்கள்தாம் காரணம் என்று படம் பார்க்கிறவர்கள் நினைக்கவேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். இது அரதப்பழசான உத்தி என்பதால் அது பலிக்கவில்லை.
பின்னணிப்பாடகர் சீனிவாஸ் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஸ்வேதாமோகன் பாடியுள்ள பேஞ்சாக்கா மழைத்துளிதான் மண்ணோடு பாடல் (திரைக்கதைக்குள் வலிந்து திணிக்கப்பட்டிருந்தாலும்) இவ்வாண்டின் சிறந்தபாடலாக இருக்கும்.
இயல்பான மனிதர்களைப் பாத்திரமாகப் படைக்க இயக்குநர் சாமிக்குத் தெரியவே தெரியாது என்பதை இந்தப்படத்திலும் காட்டியிருக்கிறார். காட்சிகளில் ஒழுங்கு இல்லாமல் அடுத்து ஒரு காட்சி வரவேண்டும் என்பதற்காகவே காட்சிகள் வருகிற மாதிரி இருக்கிறது.
தேநீர்க்கடை வைத்திருக்கும் நாயகன் தினமும் சாராயம் குடிக்கிறார். அதுவும் தங்கை பிரியங்கா, தம்பிராமய்யா, வர்ஷா ஆகியோரும் கூடவே உட்கார்ந்திருக்கிறார்கள். இந்தக் காட்சி வைத்திருப்பது எதற்காக ?
கடைசியில் தங்கை பற்றி வைக்கப்பட்டிருக்கும் கதை பாசத்துக்கு வலுச்சேர்ப்பது போலில்லாமல் நாயகனின் நோய்க்கு வலுச்சேர்ப்பது போல் அமைந்துவிட்டது. அதனால் கடுமையான அந்தத் திருப்பம் படத்துக்கு உதவவில்லை.
பாசம் பாசம் என்று சொற்களில் சொல்லப்படுகிற அளவு திரையில் இல்லை என்பதால் படம் அழுத்தமாக இல்லை.
