போராட்டத்தில் பங்கேற்ற பலரைக் காணவில்லை, அவர்களும் கொல்லப்பட்டார்களா? – பதறும் தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் மே 22 ஆம் நாள் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.

மே 22 துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 11 பேர். மே 23 மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்து அதில் காளியப்பன் என்ற இளைஞர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். செத்து அசைவற்று கிடந்த அந்த இளைஞனை, ‘ நடிக்காதே எழுந்திரு’ உயிரற்ற உடலை அடித்தது போலீஸ். அதையும் சேர்த்து பலி எண்ணிக்கை 12 ஆனது.

முதல் நாள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த ஜெயராமன் நேற்று மே 23 இரவு உயிரிழந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 13 ஆனது. சிகிச்சையில் இருந்த செல்வசேகர் என்பவர் சற்று முன்பு (மே 24, காலை) உயிரிழந்தார். இதனால் உயிர் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். தொடர்ந்து நடைபெற்று வரும் போலீஸ் தாக்குதலில் உயிரிழக்கப்போவோர் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. மே 22 முதல் நாள் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற பலர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று தகவல்கள் வருகின்றன. ‘என் பிள்ளையை காணவில்லை’ என்று எந்த போலீஸிடம் சென்று புகார் கொடுப்பது? அப்படி காணாமல் போனோர் இருக்கிறார்களா, இல்லையா என்பதும் தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response