ஐபிஎல் – மழையின் தடை மீறி பெங்களூருவைப் பந்தாடிய கொல்கத்தா

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 29-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில்
ஏப்ரல் 29 இரவு எட்டுமணிக்கு நடைபெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா, பெங்களூரு அணியை பேட்டிங் செய்யப் பணித்தது.

பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைச் சோ்த்தது. கொல்கத்தா அணி சாா்பாக பந்து வீசிய ஆந்த்ரே ரசூல் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பத்திலிருந்தே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதன் விளைவாக 6.3-வது ஓவரில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்த போது திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது.

மழை ஓய்ந்ததும் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், சுனில் நரேன் (27 ரன்கள்) முருகன் அஸ்வின் சுழற்பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, கிறிஸ் லின்னுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து பெங்களூரு அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து அணியின் ரன் வேகத்துக்கு உதவினர். இருப்பினும் மீண்டும் முருகன் அஸ்வின் சுழலில் சிக்கி உத்தப்பா 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து நிதிஷ் ராணா, கிறிஸ் லின்னுடன் இணைந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் முதுகு வலி காரணமாக நிதிஷ் ராணா (15 ரன்கள்) வெளியேற, அதிரடி வீரர் ஆந்த்ரே ரசூல் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டி காக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு 23 ரன்கள் எடுத்து வெளியேற, கொல்கத்தா அணி 19.1-வது ஓவர்களில் வெற்றி இலக்கான 176 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 62 ரன்கள் எடுத்து கடைசி வரையிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

Leave a Response