இந்தியத்தின் அகிம்சை முகத்திரையை கிழித்து எறிந்த வீராங்கனை அன்னைபூபதி.

ஏப்ரல் 19, 2015, ஞாயிற்றுக் கிழமை அன்று அன்னை பூபதியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் உலகெங்கும் எழுகையோடு நினைவு கூறப்பட்டது போன்று கனடிய மண்ணிலும் முத்தமிழ் விழாவாக நினைவு கூறப்பட்டது. அதன் விவரங்களைத் தருகிறார் செந்தமிழினி பிரபாகரன்.

அன்னை பூபதி நினைவாகவும் நாட்டுபற்றாளர் நினைவாகவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் வீர காவியம் படைத்த மாவீரர்கள் அனைவருக்குமான நினைவு நாளாகவும் முத்தமிழ் கலை நிகழ்வுகளூடாக நினைவெழுச்சி கொள்ளும் நிகழ்வாக முத்தமிழ் விழா 2015 நடைபெற்றது.
.
ஏப்ரல் 19 அன்று மாலை 6;00 மணிக்கு ஸ்காபுரோவில் 1380 பேர்ச்மௌன்ட் வீதியில் அமைந்திருக்கும் கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் கனடாத் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய கலை எழுச்சி நிகழ்வில் கனடிய தமிழ் உறவுகள் கூடி வீர வணக்கம் செலுத்தினார்கள்.

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தழல் வீரத்தில் பிஞ்சென்றும் மூப்பென்றுமோ, ஆணென்றும் பெண் என்றுமோ, போராளிகள் மக்கள் என்றுமோ பேதங்கள் இருந்ததில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆதிக்க இராணுவமாக தமிழ் மக்கள் மீது வல்லாதிக்கத்தை கட்டவிழ்த்த இந்திய இராணுவத்திற்கு எதிராக அகிம்சை வழியில் தள்ளாத வயதிலும் துணிவோடு உண்ணா நோன்பிருந்து போராடி தன்னீகம் செய்து இந்தியத்தின் அகிம்சை முகத்திரையை கிழித்து எறிந்த வீராங்கனை அன்னை பூபதி.

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகக் தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தி தமிழீழத்து மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

நாட்டுப்பற்றாளர்களின் உன்னத பங்காற்றலின் சிறப்புக்கு அன்னை பூபதி ஒரு உயர்வான குறியீடு! அத்தகைய அன்னையின் வரலாற்றை அற்புதமான கலை இலக்கிய வடிவமாக நாட்டிய நாடகமாக தந்திருந்தார்கள் நடன ஆசிரியை அற்புதராணி ஆசிரியையும் அவரது மாணவிகளும். “அகிம்சைத்தாய் ” நாட்டிய நாடகம் -எழுத்துருவாக்கம் நடன அமைப்பு யாவற்றையும் அதிசிறப்பாக வடிவமைத்திருந்த ஆசிரியை :அற்புதராணி அன்னை பூபதியின் ஈகையையும் சிறப்பாக நடித்து ஆடி விழி கலங்க வைத்தார். ஜெர்மன் கண்ணனின் உணர்வூட்டமான இசையில் பாடல்கள்.

.அற்புதமான நடனங்கள் உரைகள் என எழுச்சி நிகழ்வு நடைபெற்று உறுதி மொழியோடு நிறைவு பெற்றது.

விதைக்கப்பட்ட மாவீரம் மண்டியிடாது எழுகை கொண்டு என்றும் போராடும் என்பதே வரலாற்று நியதி! நினைவு எழுச்சி நிகழ்வுகளில் எழுகை கொண்ட மக்களின் போராட்ட பயணத்தின் தொடர்ச்சியை வரலாறுகள் எழுகையோடே எழுதி செல்லும்!

புகைப்படங்கள்:  ஈகுருவி

Leave a Response