ஐபிஎல் – தொலைக்காட்சியில் பார்ப்போர் எண்ணிக்கை குறைந்தது

ஐபிஎல் போட்டிகள் விளையாட்டு என்பதைத் தாண்டி பெரும் வியாபாரம் ஆகிவிட்டது. அதனாலேயே அதற்கு விளம்பரங்கள்.

ஐபிஎல்லின் கடந்த சீசன் வரை சோனி பிக்சர்ஸ் நெட் ஓர்க் நிறுவனம் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பியது.

இப்போது, கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் சர்வதேச உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு வாங்கியது.

ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையும் ஸ்டார் இந்தியாவுக்கே கிடைத்தது. ஸ்டார் இந்தியா அதன் சேவையை விரிவுபடுத்த இந்த ஆண்டு 10 சேனல்களில் ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் திட்டத்துடன் களமிறங்கியது. இதில் 6 மாநில மொழி சேனல்கள். மேலும், ஹாட் ஸ்டாரிலும் ஐ.பி.எல். போட்டிகளை நேரடி ஒளிபரப்புசெய்கிறது.

ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்கள் குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட முதல் 8 போட்டிகளை 245.71 மில்லியன் பேர் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர். கடந்த ஆண்டு 254.80 மில்லியன் பேர் பார்த்திருந்தனர்.

இந்தி பேசும் மாநிலங்களில் ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 19.5 சதவீதம் குறைந்து 143.53 மில்லியனாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 178.33 மில்லியனாக இருந்தது.

முதன்முறையாக ஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் 10 மில்லியன் குறைந்துள்ளது. இதில் இந்தி பேசும் மாநிலங்களின் பங்களிப்பு 20 சதவீதம். இப்படிப் பார்த்தால், சுமார் 35 மில்லியன் பார்வையாளர்கள் குறைந்துள்ளனர்.

இதுவரை தொலைக்காட்சி, ஹாட் ஸ்டார் மூலம் 371 மில்லியன் பேர் ஐ.பி.எல். போட்டிகளைப் பார்த்துள்ளனர் என ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது. இதில் டிவி-யில் 288.40 மில்லியன் பேரும், ஹாட் ஸ்டார் மூலம் 82.4 மில்லியன் பேரும் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்டார் இந்தியா நிர்வாக இயக்குநர் கூறுகையில்,ஐ.பி.எல் போட்டிகள் ஒளிபரப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒளிபரப்பு விஷயத்தில் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்கு திருப்தி இருந்ததா என ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எல்லா வியாபாரங்களிலும் நட்டம் அல்லது இலாபத்தில் நட்டம் என்று இருக்கிறது. இதற்கு ஐபிஎல் வியாபாரமும் விதிவிலக்கல்ல என்று தெரிகிறது.

Leave a Response