மன்சூரலிகானுக்காகப் போராடும் சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்ரல் 12 அன்று சென்னை வந்த மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சீமான், பாரதி ராஜா, வெற்றிமாறன், அமீர் ஆகியோர் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

மாலை 6 மணிக்கு பிறகு பாரதி ராஜா விடுவிக்கப்பட்ட போதும், சீமான் விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கமாக கைது செய்யப்படுபவர்கள் 6 மணிக்கு விடுவிக்கப்படுவர். ஆனால், சீமான் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஆனதால், அவர் கைது ஆக கூடும் என தகவல்கள் பரவின.

சீமான், வெற்றி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டால் மட்டுமே மண்டபத்தை விட்டு வெளியே செல்வேன் என்று பாரதிராஜா தெரிவித்து வெளியே செல்ல மறுத்தார். இதற்கிடையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே செல்ல முயன்றார்.

ஆனால், மன்சூர் அலிகானை மண்டபத்திற்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான், தொடர்ந்து மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து மன்சூர் அலிகானை கைது செய்தனர். காவல்துறையைக் கண்டித்து மண்டபம் அருகே போராட்டம் நடத்திய 50 -க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்சூர் அலிகான் பிணை கேட்டும் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மன்சூர் அலிகானை சிறையில் அடைத்தது ஏன் என தெரிந்து கொள்ள ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் சிம்பு இன்று வருகை தந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதில் உடன்பாடில்லை .

ஐ.பி.எல். போராட்டத்தின் போது கடமையைச் செய்ய வந்த காவலரைத் தாக்கியது தவறு; அதற்கு முன் என்ன நடந்தது என தெரியாது.

மன்சூர் அலிகான் தவறாகப் பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரைப் போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும். நடிகர் மன்சூர் அலிகான் போராட்டத்தின்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது முறையல்ல.

அவருக்கு ஆபரே‌ஷன் செய்யப்பட்டு தினமும் மருந்து உட்கொண்டு வருகிறார். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். போலீசாரிடம் தவறாக நடந்திருந்தால் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

அவரது குடும்பத்தினர் என்னைச் சந்தித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் கமி‌ஷனரை சந்தித்து முறையிட்டேன்

இவ்வாறு அவர் கூறினார்.

மண்டபம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியற்காக பத்துநாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ம்ன்சூரலிகானுக்குப் பிணை கூடக் கிடைக்கவில்லை.

சனநாயக ரீதியான போராட்டம் நடத்தியதற்காக இப்படி நடக்கிறது. இதுவரை வெளியில் தெரியாத இந்த விசயம், சிம்புவின் வருகையால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதனால் மன்சூர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று நம்பலாம்.

Leave a Response