தண்ணீர் பாட்டிலுக்குக்கூட அனுமதி இல்லை – ஐபிஎல் காண 7 கடும் கட்டுப்பாடுகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நேரத்தில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆனாலும், சென்னையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா அறிவித்தார்.

இதனால், நாளை திட்டமிட்ட படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது உறுதி ஆகியுள்ளது.

நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:-

1. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது.

2. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு பேனர்கள், கொடிகள், பதாகைகளை ரசிகர்கள் கொண்டுவரக்கூடாது.

3. தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

4. மைதானத்தை சேதப்படுத்தினால் காவல்துறையிடம் ஓப்படைக்கப்படுவார்கள்.

5. இன வெறியைத் தூண்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

6. ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது.

7. தேசியக் கொடியை அவமதித்தால் உடனடியாகக் கைது என எச்சரிக்கை.

இவை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (10 ஆம் தேதி) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை அணி விளையாடுவதால் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நுழைவுச்சீட்டு வாங்கியிருக்கும் எங்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா? என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response