எச்.ராஜாவுக்குக் கடைசியாகக் கண்டனம் தெரிவித்த அதிமுக

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மார்ச் 8,2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியாரைப் பற்றி எச்.ராஜா வெளியிட்ட கருத்து பெரியாரை அவமதிக்கும் விதமாக இருந்ததால், அது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் கொந்தளிக்க வைத்துவிட்டது. பல்வேறு எதிர்ப்புக் குரல்கள், பல்வேறு அறிக்கைகள் என எச்.ராஜாவுக்கு எதிரான கண்டனங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து, இந்தியத் திருநாட்டையே அதிரவைத்துவிட்டது. தமிழக மக்கள் பெரியாரை எவ்வளவு உயிராக நேசிக்கிறார்கள் என்ற உண்மை உலகிற்கே தெரிந்துவிட்டது.

இது பெரியார் மண். அதனால் தான் இந்த மண்ணிலே எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மதங்கள் வேறு வேறாக இருந்தாலும், மனங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அமைதியான குளத்தில் எச்.ராஜா கல்லெறிந்துவிட்டார் என்பது தான் தமிழக மக்களின் தீராத கோபம். பிரதமர் நரேந்திரமோடியும், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவும், தலைவர்களின் சிலையை, குறிப்பாக தந்தை பெரியாரின் சிலையை அவமதிக்கும் நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியாருக்கு எதிரான பதிவை நான் போடவில்லை. எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எச்.ராஜா சொல்லியிருக்கிறார். இருந்த பொழுதும், தமிழக மக்களின் மனம் புண்பட்டுப் போயிருக்கிறது. பெரியாரை நேசிப்பவர்களின் நெஞ்சம் உடைந்து போயிருக்கிறது.

தந்தை பெரியாரை அவமதிக்கும் எந்தச் செயல்களையும் ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை. அ.தி.மு.க. வும் தயாராக இல்லை. நாங்கள் பெரியாரை நேசிப்பவர்கள்; பெரியாரை பூஜிப்பவர்கள்; பெரியாரை பின் தொடர்பவர்கள். அ.தி.மு.க. எனும் வீரிய விருட்சத்திற்குள் தந்தை பெரியாரும் இருக்கிறார் என்பதை தயவுசெய்து யாரும் மறந்துவிட வேண்டாம். ஜெயலலிதாவின் ஆட்சி, அராஜகச் செயல்களை அனுமதிக்கும் என்று யாரும் கனவில்கூட நினைத்திட வேண்டாம்.

எல்லா வகைகளிலும் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டிலே, எப்படியாவது குழப்பம் விளைவித்து, குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்கலாம் என்று கருதுபவர்களின் எண்ணம் என்றைக்குமே பலிக்காது. அதற்கு ஜெயலலிதாவின் ஆட்சி இடம் கொடுக்காது.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகழையும், பெருமைகளையும் கட்டிக்காப்பதில் அ.தி.மு.க.வும், ஜெயலலிதாவின் ஆட்சியும் மிக மிக உறுதியாக இருக்கிறது என்பதைத் தமிழக மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி தில்லி பாஜகவிலிருந்தும் எச்.ராஜாவுக்கு எதிரான கருத்து வந்த பிறகு கடைசியாக இவர்கள் அறிக்கை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response