எச்.ராஜா செய்த அடுக்கடுக்கான குற்றங்கள் – முழுவிவரம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்றிருக்கிறது. இந்த ஊர்வலம் செல்ல இருந்த பகுதியில் உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அப்பகுதி காவல்துறையினர் ஊர்வலத்தைத் தடுத்துள்ளனர்.
ஊர்வலத்தைத் தடுத்ததை எதிர்த்து எச்.ராஜா கடுமையான வாக்குவாதம் செய்தார். காவல்துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக விமர்சித்த அவர் உயர்நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் கொடுத்த புகார்விவரம்….

திருமயம் காவல் நிலையத்தில் கடந்த 12.05.2016ம் தேதி முதல் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன்.

கடந்த 13.09.2018ம்தேதி அன்று மெய்யபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் சீனிவாசன் மகன் S.கணேசன் என்பவர் மெய்யபுரம் அருள்மிகு மஹா முத்துமாரியம்மன் கோவில் முன்பாக விநாயகர் சிலை வைத்து சாமி கும்பிட்டு ஊர்வலமாக சென்று புதுக்கண்மாயில் விகர்சனம் செய்யவும்,ஒலிபெருக்கி அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தார்.

அம்மனுவினை பரிசீலனை செய்து 13.09.2018ம்தேதி அன்று திருமயம் காவல் ஆய்வாளர் என்ற முறையில் செயல்முறை ஆணை ஒன்றினை மாண்புமிகு உயர்நீதிமன்ற கிளை WP.(MD) NO:19875/18 மற்றும் WP.(MD) NO:17557/18 ஆகிய உத்தரவினை குறிப்பிட்டு விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது எந்த ரூட்டில் செல்வது என்றும்,கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை பட்டியலிட்டு மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் 15.09.2018ம்தேதி அன்று காலை 08.00மணி முதல் நானும் என்னுடன் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திருமதி நிகல்யா,பயிற்சி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன்,சி.உ.ஆ.ராஜூ,சி.உ.ஆ.பரதன், இரண்டாம் நிலை காவலர்கள் 1279 பாண்டியராஜன்,1468 இளங்கோவன் மற்றும் காவல்துறை அலுவலர்கள்,ஆயுதப்படை காவலர்கள் 10 பேர் திருமயம் காவல்நிலைய சரகம் மெய்யபுரம் கிராமத்தில் மஹாமுத்துமாரியம்மன் கோவில் முன்பாக பாதுகாப்பு பணியில் இருந்தும் அன்று பொதுமக்கள் சுமார் 90 நபர்களுக்கு மேல் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.

அன்று பகல் சுமார்12.15 மணிக்கு1) H.ராஜா BJP தேசிய செயலாளர் காரைக்குடி,2)கணேசன் இந்து முன்னனி ஒருங்கிணைப்பாளர்,மெய்யபுரம்,3)பழனிவேல்சாமி இந்து முன்னனி மாநில பொறுப்பாளர் திண்டுக்கல்,4)RSSதென்மண்டல் செய்தி தொடர்பாளர் திரு.சூர்யநாரயணன்,5)இந்து முன்னனி புதுக்கோட்டைமாவட்ட அமைப்பாளர் கற்பகவடிவேல்,6) சிவகங்கை மாவட்ட இந்து முன்னனி செயலாளர் அக்னிபாலா 7) சிவகங்கை மாவட்ட BJP செயலாளர் திரு ரமேஷ்,8) BJP திருமயம் ஒன்றியசெயலாளர் ஜெயம் சுப்பிரமணியன் மற்றும் சிலர் வந்தார்கள்.

அப்போது H.ராஜா என்பவர் நான் பேசுவதற்கு ஏன் மேடை போடவில்லை என்று கேட்டபோது போலிஸார் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மேடை மற்றும் கொட்டகை அமைக்க இடைக்கால தடை உத்தரவு இருக்கிறது என்று கூறியபோது H.ராஜா கைக்கோர்ட்டாவது மயிராவது என்று ஆவேசமாக பேசியும்,காவல்துறைக்கு வெக்கம் இல்லையா?தமிழ்நாடு போலிஸ் ஈரல் அழுகிபோய்விட்டது என்று பேசியும் போலிஸாரை மிரட்டும் தோணியில் பேசினார்.

பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவை நீங்கள் கடைபிடிக்கவேண்டுமென்று மீண்டும் கூறிய போது கைக்கோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்லி அங்கிருந்த நபர்களிடம் மேடை அமைக்க சொன்னதன் பேரில் அங்கிருந்த நபர்கள் இரும்பு பைப் மற்றும் மர பலகையை பயன்படுத்தி தற்காலிகமாக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கோவில் அருகே வீதியில் மேடை அமைக்க முயற்சி செய்த போது போலிஸார் தடுக்க முயற்சி செய்தார்கள்.

அரசு ஊழியர் கட்டளைக்கு கீழ்படியாமல் தற்காலிக மேடை அமைத்து அதில் H.ராஜா ஏறி நின்று ஒலிபெருக்கியை பயன்படுத்தி சுமார் 90 நபர்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு அச்சம்,மாற்று பிரிவினருக்கு பீதியை விளைவிக்கும் வகையில் ஆவேசமாக பேசினார்.பின்னர் மேடையில் இருந்து கீழே இறங்கி சர்ச் வழியாக ஊர்வலமாக செல்ல முயன்ற H.ராஜா மற்றும் அவருடன் வந்தவர்களை தடுத்தபோது பொது மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாமல் பொதுமக்களுக்கு தொல்லை உண்டாக்கும் வகையில்,போலிஸார் தடை ஏற்படுத்தி இருந்த தடுப்புகளை சட்டவிரோதமாக எடுத்து அப்புறப்படுத்திவிட்டு குற்றமுறு மிரட்டல் விடுத்து வன்முறையை செயல்படுத்தும் விதமாக ஊர்வலமாக சென்றபோது அச்சம் தரும் கோஷங்களை எழுப்பி சென்றார்கள்.

எனவே மேற்படி நபர்களின் செய்கையானது பொது ஊழியரின் உத்தரவுக்கு கீழ் படியாமலும் சட்டவிரோதமாக பொது அதிகாரியின் உத்தரவை மீறி ஒன்றாக கூடியும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டும் பொது இடத்தில் அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு எதிராக ஆவேசமாக பேசி செயல்பட்டு மற்ற பிரிவினருக்கு பீதியை உண்டாக்கும் வகையில் குற்றச்செயலை செய்ய தூண்டும் உட்கருத்துடன் செயல்பட்டு பொது ஊழியர் தன் கடமையை செய்யவிடாமல் தடுத்த மேற்படி நபர்கள் மீது பிரிவு இ.த.ச பிரிவுகள் 143,188,153(A),290,294(b),353,505(1)b,505(1)c,506(i)ன் படி வழக்கு பதிவு செய்து இதன் அசல் நகலை கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமயம் அவர்களுக்கு அனுப்பியும்,இதர நகல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response