உங்கள் வேலையைப் பாருங்கள் – கமலை எச்சரித்த வைகோ

பெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவின் பதிவு பெரிய கோபாவேசத்தை தமிழகம் முழுவதும் கிளப்பியது. இதனால் எச்.ராஜா பதிவை நீக்கினார். அன்று இரவு கமல்ஹாசன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் ”அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கமல்ஹாசன் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாலு நாளைக்கு முன் அரசியலுக்கு வந்துட்டு என்ன வேண்டுமானாலும் பேசுவாயா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது வைகோ பேசியதிலிருந்து…

மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ள கமல்ஹாசன் என்ன சொல்கிறார். அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு.

மிஸ்டர் கமல்ஹாசன் நீங்கள் அரசியலுக்கு வந்து ஐந்தாறு நாட்கள் ஆகிறது. நாங்கள் வெட்டிப்பேச்சு பேசுகிறோம் என்பதை உங்கள் மொழியில் சொல்கிறீர்களா? நானோ,ஸ்டாலினோ, திருமாவளவனோ, சீமானோ உங்கள் பேச்சாற்றலை விழலுக்கு இறைத்த நீராக்காதீர்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். இதற்கு என்ன அர்த்தம் வெட்டிப் பேச்சு பேசாதீர்கள் என்கிறீர்கள்.

நான் உங்கள் பேரைச் சொல்லி பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு 20 ஆண்டு போராடி, தியாகம் செய்து ஜெயிலுக்கு போய் மக்கள் பிரச்சினைகளில் போராடி ஒரு கருத்தை சொன்னால் அந்த நபர் கருத்துக்கு பதில் சொல்லலாம்.

என்னிடம் காலையிலிருந்து பலபேர் தொலைபேசியில், இப்படிச் சொல்லியிருக்கிறாரே? என்று பத்திரிகை துறையிலிருந்து கேட்டார்கள். அதனால் தான் நான் சொல்கிறேன். இல்லாவிட்டால் கமல்ஹாசன் பேரை எல்லாம் சொல்ல மாட்டேன். யாருக்கு அறிவுரை சொல்கிறீர்கள், உங்கள் எல்லை எது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

வழிபடுதல் வேறு, வழி நடத்தல் வேறு. இதை எதற்காகச் சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுச் செல்லுங்கள். ஆனால் எங்களுக்கு வெட்டிப்பேச்சு பேச வேண்டாம் என்று அறிவுரை சொல்ல வேண்டாம். 54 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எங்கே எதைப் பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும். மைண்ட் யுவர் பிசினஸ். ”

இவ்வாறு வைகோ பேசினார்.

Leave a Response