பெண் சாதனையாளர் விருது பெறும் 5 பெண்களும் அவர்களுடைய சாதனைகளும்

ஃப்ர்ஸ்ட்காபிபுரொடக்‌ஷன்ஸ் (First Copy Productions) நிறுவனர் மாலா மணியன், கடந்த எட்டாண்டுகளாக ‘பெண் சாதனையாளர்’ விருதுகளைத் தோற்றுவித்து தகுதியானவர்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்த விருதுகள் கல்வி, மருத்துவம், சமூக சேவை, கலை மற்றும் தொழில் முனைவோர் ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பை நல்கியவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த முயற்சிக்கு காட்சி ஊடகப் பங்குதாரராக ராஜ் தொலைக்காட்சியும் அச்சு ஊடகப் பங்குதாரராக தினமலரும் தொடர்ந்து தங்கள் ஆதரவை நல்கி வருகின்றன.

இவ்வாண்டின் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 11,2018 ஆம் தேதி மாலை 4.25-க்கு நடைபெறுகிறது. மண்முகி கிராமத்தில் அமைந்திருக்கும் முதியோர் குடில்கள் (senior citizen cottages) மற்றும் பசுமை விவசாயப் பண்ணைகளுக்கு (organic farming) இடையே ஒரு வித்தியாசமான சூழலில் இந்த விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு விருதுகள் பெறுவோர்:

1. திருமதி.பிரேமா வீரராகவன்-கல்வி.

2. டாக்டர்.எஸ்.மீனாக்ஷி-மருத்துவம்

3. செல்வி.சோனியா மஜூம்தார்-கலை

4. உமா பாலகிருஷ்ணன்-தொழில்முனைவோர்

5. செல்வி.ப்ரீத்தி ஸ்ரீனிவாசன்-சமூக சேவை.

இவர்களைப் பற்றிய குறிப்புகள்….

Preethi Srinivasan

உடலென்பது உயிர் வாழும் கோயிலாகும். அது எப்பொழுது சிறையாகிறது? இறக்கை கட்டிய மனமும் உடைந்த உடலும் சங்கமிக்கும் போது தான்! முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போயிருக்கும் பலரும் இப்படித் தான் இருக்கிறார்கள். அவர்களை மனதளவில் எழுந்து நடமாட வைக்கிறார் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரே முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்டவர் தான்.

இளவயதில் சிறந்த நீச்சல் வீராங்கனையாகத் திகழ்ந்தவர். பல பதக்கங்களை வென்றவர். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையும் கூட. தமிழ்நாட்டின் பெண்கள் U-19 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக இருந்திருக்கிறார். இவருடைய தலைமையில் தான் U-19-க்கான தேசிய கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டு அணி வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இன்றுவரை இந்தப் போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி வெற்றி காணவில்லை.

விடுமுறைக் காலத்தில் ஒரு நாள் கடற்கரை ஓரமாக தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது கால் தடுக்கி தண்ணீரில் விழுந்து விட்டார். அதன் விளைவாக முதுகு தண்டு வட நோயால் பாதிக்கப்பட்டார். தனது கழுத்துக்குக் கீழே அவருக்கு எந்த உணர்வும் இல்லாமல் போனது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்த நோயினால் பாதிக்கப்பட்ட எல்லோரையும் போலவே தோல்வி மனப்பான்மைக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளானார்.

உடைந்தது மனித எலும்பு தான். தன் மனதோ இரும்பால் ஆனது என்பதை உணர்ந்தார். இதிலிருந்து மீள வேண்டுமானால் தான் மட்டும் எழுந்தால் போதாது தன்னைப் போல முதுகு தண்டு வட நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் கைதூக்கி விட வேண்டும் என்று முடிவு செய்தார்.

Soulfree என்னும் அமைப்பை தொடங்கினார். Soulfree-யின் முதல் பணி முதுகு தண்டு வட நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். இந்த நோய் பற்றிய புரிந்துணர்வு இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட கிடையாது என்பது தான் யதார்த்தம்.

வருமானம் இல்லாத நோயாளிகளுக்கு stipend-ஆக ரூபாய் ஆயிரம் வழங்குதல், சக்கர நாற்காலிகள், air-beds, ஊன்றுக்கோள்கள்,மருத்துவ சிகிச்சைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுய வாழ்வுக்கான பயிற்சிகள், counseling, குறுகிய மற்றும் நீண்ட கால மறுவாழ்வு மையங்கள் ஆகியவை Soulfree-யின் சிறப்பான திட்டங்களில் சில.

ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் எழுந்து நிற்கிறார்… அவருடைய உயரத்தை நம்மால் எட்ட முடியுமா?

Mrs.Prema Veeraragavan

கல்வி போதிப்பதும் கற்பதும் ஒரு கடமைக்காக நடந்தால் அங்கு அறிவு செழிக்காது. போதிப்பவரும் கற்பவரும் அனுபவித்துப் பங்குபெற்றால் தான் கல்வியின் நோக்கம் வெற்றி பெறும். இப்படி ஒரு புதிய கல்வி முறையை வடிவமைத்து செயல்படுத்தி வருபவர் தான் கல்வியாளர் பிரேமா வீரராகவன்.

இவர் ஒரு ஆசிரியராக தனது வாழ்க்கையை ஒரு புகழ்பெற்ற கல்வி நிலையத்தில் தொடங்கினார். பொதுவாக மாணவர்களிடையே படிப்பில் இருக்கும் ஆர்வமின்மையைக் கண்டார். பாட்டும் நடனமும் எப்படி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதோ அப்படித் தான் கல்வியும் இருக்க வேண்டும் என்று உணர்ந்தார். இதற்காக ஒத்த கருத்துடையவர்களோடு சேர்ந்து அவர் உருவாக்கியது தான் Vidyarambam Trust!

2002-ல் கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டையில் தான் வித்யாரம்பம் தொடங்கப்பட்டது. ஒரு ஆசிரியருக்கு பதினேழு மாணவர்கள் வீதம் 86 மையங்கள் அமைக்கப்பட்டன. இன்று நூற்றுக்கணக்கான மையங்களோடு ஓங்கி வளர்ந்த ஒரு விருட்சமாக நிற்கிறது.

கல்வித் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த கல்வியாளராகச் சேவை செய்து வருகிறார் பிரேமா வீரராகவன். கிராமப்புற சிறார் மாணவர்களுக்கு அதிலும் குறிப்பாக பள்ளிக் கல்வியில் பின் தங்கும் மாணவர்களின் படிப்பில் தனி கவனம் செலுத்துகிறார். குழந்தைகளுக்காக Young world-ல் அறிவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது கல்விச் சேவையை அங்கீகரித்து Castme.UK விருது 98-ல் வழங்கப்பட்டது.

தற்காலக் கல்விக் கொள்கையில் இருக்கும் தேக்க நிலையை உடைத்து நவீன கல்விக் கோட்பாட்டை உருவாக்கிய கல்விப் புரட்சியாளர் பிரேமா வீரராகவன்.

Uma Balakrishnan

நம் பாரம்பரியக் கலை வடிவங்களான இசையையும் நடனத்தையும் ஆராதித்து வருகிறோம். அது போன்று நம் உடைகளில் இருக்கும் பாரம்பரியத்தை உயிர்ப்பித்துக் காத்து வருகிறார் உமா பாலகிருஷ்ணன்.

இன்று புடவைகளில் நாம் பார்க்கும் பூத்தையல் (embroidery) மற்றும் design-கள் பெரும்பாலும் இயந்திரங்களால் உருவாக்கப்படுபவை. ஆனால் முன் காலத்தில் இவை கைவினைஞர்களால் கோர்க்கப்பட்டன. இந்த கைவினை மரபு இன்று அழியும் நிலையில் உள்ளது. இந்த பாரம்பரியத்தை அழியாமல் பாதுகாத்து செழிக்கவும் செய்து வருகிறார் இவர்.

கல்லூரிப் பருவத்திலேயே இவருக்குப் புடவைகளில் இருக்கும் பூத்தையல்களின் மேல் நிறைய லயிப்பு இருந்தது. ஒரு புடவை வாங்கினால் அதை அப்படியே அணிய மாட்டாராம். தனது எண்ணங்களையும் அந்த புடவையில் கோர்த்து அழகு பார்ப்பாராம்.

உமா பாலகிருஷ்ணன் ஒரு முன்னாள் கல்லூரிப் பேராசிரியர். இவரது கணவர் ராணுவத்தில் Lieutenant Colonel-ஆக பணிபுரிந்தவர். அவருக்கு பணியிட மாறுதல் வரும்போதெல்லாம் இவரும் துணையாகச் செல்வார். இப்படி இந்தியாவின் பல மாநிலங்களில் வாழ்ந்து இருக்கிறார். அங்கெல்லாம் கிராமப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள பெண்களைச் சந்தித்து உரையாடுவாராம். அந்தந்த ஊர்களைச் சேர்ந்த Kalamkari design-கள் block printing பற்றியெல்லாம் தெரிந்து கொள்வாராம்.

இன்று பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். Online மூலமாக கைவினை வேலைப்பாட்டுடன் கூடிய புடைவ விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். பல மாநிலங்களைச் சேர்ந்த கைவினைத் தொழிலாளர்கள் இவரிடம் வேலை செய்கிறார்கள். இந்தக் குடும்பங்கள் இவரை நம்பி வாழ்கின்றன. இந்தத் தொழிலை வர்த்தமாக இல்லாமல் சேவையாகச் செய்து வருகிறார். அதனால் பல நேரங்களில் கட்டுபடியாகாத விலைகளுக்கும் இந்தப் புடைவைகளை விற்க வேண்டி வருகிறது.

நம் நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பது நம் எல்லோரது கடைமையும் ஆகும். நமக்காக அதை உமா பாலகிருஷ்ணன் செய்து வருகிறார்.

Sonia Mazumdar

Earthsync என்னும் இசைப் பதிவு நிறுவனத்தை உருவாக்கியவர் சோனியா மஜூம்தார். கடந்த ஐந்தாண்டுகளில் Earthsync நிறுவனம் பல இசை ஆவணப் படங்களையும் இசை album-களையும் தயாரித்து வெளியிட்டிருக்கின்றது. இவற்றில் பல விருதுகள் பெற்றவையாகும். உலகின் பல மூலைகளில் இருக்கும் இசைக் கலைஞர்களை இணைத்து புதிய இசைகளை உருவாக்குவது தான் Earthsync-கின் நோக்கமாகும். இந்த நிறுவனத்தின் இசை வெளியீடுகளை Youtube, twitter மற்றும் facebook-இல் லட்சக்கனக்கானோர் கேட்டு மகிழ்கின்றனர்.

விளிம்பு நிலைச் சமூகங்களின் இசைகளையும் பாடல்களையும் இந்த நிறுவனம் பதிவு செய்து வருகிறது. இந்தச் சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஒரு மேடை அமைத்துத் தருகிறது.

2004-ம் ஆண்டு சுனாமி ஆழிபேரலையின் போது ஆறு நாட்டு மீனவ மக்களை ஒன்றிணைத்து கடல் அன்னைக்கும் அவர்களுக்குமான அந்தப் பாசப் பிணைப்பைப் பாடல்களாக ஒலிப்பதிவு செய்தார் சோனியா மஜூம்தார்.

சாஸ்திரிய சங்கீதம் மட்டும் அல்லாமல் அதன் எல்லைக்கு அப்பால் இருக்கும் சாமானிய மக்களின் இசையையும் பொதுத் தளத்திற்கு அறிமுகம் செய்கிறார் இவர். இந்தியாவின் இசை மற்றும் நாடகத் துறைகளில் புதிய முயற்சிகளுக்கு வடிவம் கொடுக்கிறார் இந்த “உலக இசை காதலர்” சோனியா மஜூம்தார்.

Dr.S.Meenakshi

மருத்துவத் துறையில் இன்று நாம் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இந்தச் சவால்களுக்கு விடை சொல்ல வந்தவர் தான் டாக்டர்.எஸ்.மீனாக்ஷி.

டாக்டர்.எஸ்.மீனாக்ஷி 2002-ல் Prayas மருத்துவ மையத்தில் இணைகிறார். அவர் சேர்ந்த பிறகு தான் குழந்தைகள் நலப் பிரிவு அங்கு தொடங்கப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே தரமான மருந்துகளை குறைவான விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கிறார். இந்தச் செயலுக்குப் பின்னால் ஒரு மனித நேயமிக்க சிந்தனை இருக்கிறது. ஏனெனில் ஒரு ஆய்வின்படி இந்தியாவில் 6-ல் ஒரு பங்கு ஏழ்மை மருத்துவ செலவுகளாலேயே ஏற்படுகிறது.

பூரணத்துவமிக்க (Holistic) ஒரு மருத்துவ சிகிச்சை முறையை Prayas-இல் அறிமுகப்படுத்தினார். அதாவது மருத்துவ சிகிச்சை மட்டுமில்லாமல் குழந்தை வளர்ப்பு குறித்து counseling-க்கும் ஏற்பாடு செய்தார்.

மருத்துவத் துறையில் டாக்டர்.எஸ்.மீனாக்ஷியின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை. நோய் எதிர்ப்பு கொல்லி (antibiotics) மாத்திரைகளின் பயன்பாடும் அவைகளினால் வரும் அபாயங்கள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். TB நோயை கட்டுபடுத்தும் முயற்சிகளில் அரசாங்க மருத்துவ மையங்களோடு இணைந்து பணியாற்றுகிறார். சமுதாய அவலமான குழந்தை பாலியல் கொடுமைகள் பற்றியும் விழிப்புணர்வைப் பரப்பி வருகிறார்.

டாக்டர்.எஸ்.மீனாக்ஷி குழந்தைகள் நல மருத்துவர் மட்டுமல்ல குழந்தைகளின் பாதுகாவலரும் கூட. அவர் இந்த சமுதாயத்திற்குக் கிடைத்த ஒரு கொடையாவார்.

Leave a Response