தமிழ்நாட்டில் அழகாக அரசியல் செய்கிறார்கள் – தேவகவுடா பேட்டி

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கொரூரில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி அணையை பார்வையிட்டார். அணையில் உள்ள நீர் இருப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி வழக்கில் கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட கூடாது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் காவிரி மீது உள்ள கர்நாடகத்தின் உரிமைகள் பறிபோகும். கர்நாடகத்திற்கு தண்ணீர் கிடைக்காது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

கர்நாடகத்தில் உள்ள சூழ்நிலைகள், இங்குள்ள தேவைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து நான் ஆய்வு நடத்த உள்ளேன். பின்னர் அதுதொடர்பான அறிக்கையை நான் மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் சமர்ப்பிப்பேன். மத்திய அரசிடம் கர்நாடகத்தின் நிலைமையை எடுத்துக் கூறுவேன். அப்படி தெரியப்படுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று நான் மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்.

காவிரி பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக கருதாமல் கர்நாடக மக்களுக்காக பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) இப்படி அனைவரும் ஒன்று சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காவிரியில் கர்நாடகத்தின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசியல் நிலவரங்களை, இங்குள்ள அரசியல் தலைவர்கள் பார்க்க வேண்டும். அவர்கள் எவ்வளவு அழகாக அரசியல் நடத்துகிறார்கள். அவர்களைப் பார்த்து இங்குள்ள அரசியல்வாதிகள் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது ஹேமாவதி அணையை பார்வையிட்டதுபோல் விரைவில் ஹாரங்கி, கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளையும் நான் பார்வையிட இருக்கிறேன். அணைகளில் உள்ள நீர் இருப்பு உள்பட பல்வேறு அம்சங்களை தெரிந்து கொண்டு அதுதொடர்பாக அறிக்கை தயாரிக்க உள்ளேன். வருகிற 5 மற்றும் 6-ந் தேதிகளில் நான் புதுடெல்லி செல்ல இருக்கிறேன். அப்போது கண்டிப்பாக நிதின் கட்காரியை சந்திப்பேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Leave a Response