யாழ் – திரைப்பட விமர்சனம்

மார்ச் 2,2018 ஆம் நாள் வெளியாகியிருக்கிற யாழ் திரைப்படம், தமிழீழப்போர்க்களத்தின் சிறு துளியைப் பதிவு செய்திருக்கிறது. அது பெருவெள்ளமாகி நம்மை மாளாத்துயரில் ஆழ்த்துகிறது.

இரண்டு மணி நேரத்தில் நடக்கிற கதையை எழுதி, எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற திரைக்கதை மூலம் யாழ் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த்.

தமிழீழ நிலமெங்கும் செழிப்பாகப் பயிர்கள் விளைய வேண்டிய வயல்வெளிகளில் சிங்கள ராணுவம் புதைத்து வைத்த மிதிவெடிகள் நிறைந்திருப்பதையும் அதனால் ஏற்படும் கொடுமைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

வினோத், லீமாபாபு இணையர், சசிகுமார் மிஷாகோசல் இணையர் மற்றும் சிங்கள ராணுவக்காரனாக டேனியல்பாலாஜியும் அவரிடம் சிக்கித்தவிக்கும் தமிழ்ப்பெண்ணாக நீலிமாராணியும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களோடு பேபி ரக்‌ஷனா மற்றும் ஒரு கைக்குழந்தை ஆகியோரும் நம்மைக் கலங்க வைக்கிறார்கள்.

பனை சூழ் தமிழ் நிலமெங்கும் விழுந்து வெடிக்கும் வெடிகுண்டுகள் நம் நெஞ்சைத் துளைக்கின்றன.

படம் தொடங்கியதிலிருந்து கடைசி வரை யாழ் இசைக்கருவி ஒரு பாத்திரம் போலவே வருவது சிறப்பு.

ஒரிரு காட்சிகளில் வருகிற ஓவியர் சந்தானம் மற்றும் வயல்களில் மிதிவெடிகளை அறுவடை செய்கிறேனே என்று கதறும் பெரியவரும் கொள்கைப்பிடிப்பான ஈழமக்களின் குறியீடுகள்.

இலண்டனிலிருந்து காதலனைத் தேடிவரும் மிஷா, கடைசியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதும், பேபி ரக்‌ஷனாவின் காதில் இரத்தம் வழிவதையும் பார்க்கும் போது நம் கண்களில் இரத்தம் வருகிறது.

கடைசிக்காட்சியில் திரையிலிருந்து நம்மைப் பார்க்கும் நீலிமாவின் குழந்தையின் நிலையில்தான் ஈழத்தமிழ்ச்சமூகம் மொத்தமும் இருக்கிறது. அதை நினைக்கையில் நெஞ்சம் நடுங்குகிறது.

எஸ்.என்.அருணகிரியின் இசையில் பாடல்கள் பொருத்தமாக இருக்கின்றன. யாழ் பற்றிய தொடக்கப்பாடல் சிறப்பு.

இந்தியச்சட்டங்கள் அனுமதிக்கும் வரையறைக்குள் நின்று கொண்டு சிங்களன் செய்யும் அப்பட்டமான இனப்படுகொலையைப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் பாராட்டுக்குரியவர்.

Leave a Response