கருணாநிதி சந்திப்புக்குப் பின் கமல் அளித்த பேட்டி

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21, 2018 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், தனிக்கட்சி தொடங்கி கொடி மற்றும் கட்சியின் கொள்கை விவரங்களை அறிவிக்க உள்ளார்.

அதையொட்டி, அரசியல் கட்சி மூத்த தலைவர்கள் மற்றும் தன் நலன் விரும்பிகளை அவர் சந்தித்து பேசி வருகிறார். அதன்படி பிப்ரவரி 18 மதியம் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து, கட்சி தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

பின்னர் இரவு 8.20 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த கமல்ஹாசனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாசலில் வந்து வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். கருணாநிதியுடனான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.

கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த கமல்ஹாசனிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பார்த்து வாழ்த்துப் பெற வந்தீர்களா? கட்சி தொடக்க விழாவுக்கு அழைப்பு கொடுக்க வந்தீர்களா?

பதில்:- வாழ்த்துக் கேட்கத் தான் வந்தேன். மூத்த தலைவர்களை எல்லாம் சந்தித்துக்கொண்டு இருக்கிறேன். அவர்களிடம் நான் செல்லும் பாதை இவ்வாறானது. இங்கே செல்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வந்தேன். நான் இந்த வீட்டுக்கு வருவது இது முதல் முறை அல்ல.

கேள்வி:- முரசொலி பவள விழாவில் பேசும் போது, தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் வரை திராவிடம் இருக்கும் என்றீர்கள். உங்கள் கொள்கையில் திராவிடம் இருக்குமா?

பதில்:- ஆமாம். தேசிய கீதத்தில் இருக்கும் போது, என் கொள்கையில் இருக்காமல் போகுமா?

கேள்வி:- சினிமாவில் கருணாநிதியின் தமிழைப் பார்த்து வளர்ந்தேன் என்றீர்கள். அரசியலில் கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பும் சிறப்புத் தன்மை என்ன?

பதில்:- அவருடைய (கருணாநிதியின்) அறிவுக்கூர்மை, தமிழ், மக்களிடம் உள்ள அக்கறை, இவை எல்லாம் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். அது பலரிடமும் இருக்கிறது. இவரிடம் ஒரு தனித்தன்மை இருக்கிறது.

கேள்வி:- அடுத்த ஆட்சி தி.மு.க. என்ற கனவில் இருக்கிறார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது. எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அவங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது.

கேள்வி:- தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவீர்களா?

பதில்:- அவர்கள் (தி.மு.க.) கொள்கை என்ன என்று எல்லோருக்கும் தெரியும். என்னுடைய கொள்கை என்னவென்று அவர்கள் புரிந்து கொண்ட பிறகு, அது ஒத்து வருகிறதா? என்று அவர்களும் முடிவு செய்ய வேண்டும். நானும் முடிவு செய்ய வேண்டும்.

கேள்வி:- யார் வேண்டுமானாலும் வாழ்த்துப் பெற்றுவிட்டு போகலாம். ஆனால் தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில் அதையும் மீறி உங்களால் அந்தக் களத்தைச் சந்திக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

பதில்:- நான் வந்திருப்பது மக்கள் சேவைக்காக. களத்தையோ, யாரையோ அசைக்க அல்ல. வந்திருப்பது மக்கள் சேவைக்காக. அதற்கு மக்கள் தான் சந்தோஷப்பட வேண்டும். அவர்களுக்கு (தி.மு.க.வினருக்கு) இது புதிதல்ல.

இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

Leave a Response