ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ் இருக்கை அமைய தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், நிதியுதவியானது தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும், முதன்மைக்காகவும் போராடும் கருணாநிதி சார்பில் வழங்கப்படும். தமிழுக்குக் கிடைக்கப் போகும் ஹார்வர்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம் ஆகும்.
உயர் நீதிமன்றம், மத்திய அரசின் அலுவலகங்களில் நிச்சயம் ஒரு நாள் தமிழ் அரியணை ஏறியே தீரும். தமிழ் இருக்கை விரைவில் அமைந்து தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிதியளித்தது பற்றிய சுவாரசியமான பின்னணித்தகவல்கள்…
ஹார்வெர்ட் தமிழ் இருக்கை அமைய தளபதி ஒரு கோடி நன்கொடை அளித்ததிற்கு பின்னால் ஒரு சிறு வரலாறு இருக்கிறது.
இந்திய வரலாற்றில் முதன் முறையாகக் கலைஞரும், ஜெயலலிதாவும் முழு மனதோடு சம்மதித்த விசயம் இந்த ஹார்வெர்ட் தமிழ் இருக்கை அமைய நிதி தருகிறேன் என்று சொன்னது!
அதிமுக ஆட்சி அமைத்து, அதனிடம் சில மாதங்கள் முன்பு கிட்டதட்ட 4.5 கோடிகள் நிதி பெற்றாகி விட்டது!
இந்த ஹார்வெர்ட் தமிழ் இருக்கை அமைய முதல் விதையை இட்டது, நிதி அளித்தது மருத்துவர் ஜானகிராமன். இவர் கலைஞர் மற்றும் ஜெயலலிதா அமைச்சர்கள் சிலரிடம் நேரில் பேசி சம்மதம் பெற்று விட்டாலும், மருத்துவர் அமெரிக்கா மற்றும் உலகத் தமிழர்களிடம் நிதி கேட்டு பல நாடுகள், அமெரிக்காவில் பல மாநிலங்கள் சென்று பெரும் நிதிகளை திரட்டினார் என்றால் அது மிகையல்ல!
மருத்துவர் ஜானகிராமன், மற்றும் ஹார்வெர்ட் நிர்வாகக் குழு – தளபதி ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் நினைவு ஊட்டியதும் மிக முக்கிய விசயம்!
அதனை தொடர்ந்து டெக்சாஸ் மாநிலம், டலாஸ் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் திரு கால்டுவேல் வேள்நம்பி, வரும் பேரவை விழாவின் ஒருங்கிணைப்பாளர்! மிக சிறந்த தமிழ் குடும்பம் – தந்தை தமிழ் ஆசிரியர் – மிகச் சிறந்த தொழில் அதிபரும் கூட, ஆனால் பார்வைக்கு மிக எளியோன்!
கால்டுவேலும், திராவிட கழக வழக்குரைஞர் அருள்மொழி அக்காவும் சென்ற டிசம்பர் மாதம் தளபதி யை அவரது இல்லத்தில் சென்று – மீண்டும் ஹார்வெர்ட் இருக்கை அமைய, கலைஞர் சம்மதித்த விசயம், மற்றும் திமுகவின் நிதி எப்படி – அமெரிக்கத் தமிழர்கள் வரலாற்றில் மிக முக்கியமாக இடம் பெற வேண்டும் என விளக்கிச் சொன்னதும், தளபதி உடன் சம்மதம் தெரிவித்தார்!
தளபதி இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், முன்னாள் கல்வி அமைச்சர் பொன்முடியும், அருள் மொழி அக்காவும் இருந்தது கூடுதல் சிறப்பு! இந்த முயற்சியில் பலருக்கும் பங்கு உண்டு என்றாலும், கால்டுவேல் வேள்நம்பியின் தளபதி சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையல்ல!
கடந்த ஒரு சில வாரங்களாக இந்த மகிழ்ச்சிச் செய்திக்காக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!
மேலும் தளபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்ற மருத்துவர் எழிலன் நாகநாதன், காவல்துறை அதிகாரி திரு சந்திரசேகரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்!
எப்படியோ ஊர் கூடித் தேர் இழுக்கும் நேரம் வந்துவிட்டது! ஹார்வெர்ட் இருக்கைக்கு கிட்டதட்ட 95% நிதி திரட்டி ஆகியாகிவிட்டது! ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பாஸ்டனில் உள்ள ஹார்வெர்ட் தமிழ் இருக்கை அமைய இருக்கும் நாள் – அமெரிக்கத் தமிழர்களின் மற்றும் உலகத் தமிழர்களின் மிக மகிழ்ச்சியான, வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்!
தாயே தமிழே வணக்கம்!
வாழ்க தமிழ் ! ஓங்குக அதன் புகழ்!
சிவா, வாசிங்டன்