திரைப்பட விழாவில் இயக்குநர் அமீர் செய்த துணிகர செயல்

இயக்குநர் அமீரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய முத்துகோபால் நடித்து இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்கிற படத்தை இயக்குநர் அமீரே தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இயக்குநர் முத்துகோபால் மற்றும் ஹரீஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாகவும், சாந்தினி மற்றும் தாருஷி கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், முனீஸ் ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் அமீரும் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் சனவரி 24,2018 அன்று நடந்தது. படத்தின் பெயருக்கேற்ப ஒரு திரைப்பட விழாவில் சமுதாயப் போராளிகளை அழைத்துச் சிறப்பு செய்தார்கள்.

தமிழ்த்தேசிய விடுதலைப் படை அமைத்து தமிழக விடுதலைக்காகப் போராடி மடிந்த தமிழரசன் அவர்களின் தாயார் 105 வயதான பதூசு என்கிற பசுபதி அம்மாள், சுப.உதயகுமார், செல்வி வளர்மதி, ஓவியர் பாலா, டிராபிக்ராமசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வு குறித்து இயக்குநர் பாலமுரளிவர்மன் எழுதியிருக்கும் பதிவில்…

24.1.18 என் வாழ்வில் மிகச் சிறந்த நாள்.உளம் நிறைந்த மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன்.உணர்கிறேன்.

ஆற்றியிருக்கும் பணிகளை நான் செய்தேன் நான் செய்தேன் என்று சொல்லிக்கொள்ளும் வழக்கம் எனக்கில்லை.ஆனால் இதை என் வாழ் நாள் பெருமையாகக் கருதுவதால் பகிர்கிறேன்.

நேற்று அச்சமில்லை அச்சமில்லை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தினோம்.பலன் எதிர்பாராது மக்களுக்காக போராடுபவர்கள்தான் சிறப்பு விருந்தினர்கள்.

புரட்சி என்பதன் அடிப்படை பேரன்பு.அத்தகைய பேரன்போடு தன் மக்களுக்காக காவல்துறையின் கல்லெறிதாங்கி உயிர் நீத்த
அருந்தலைவர் தமிழரசனை வெகுமக்கள் ஊடகத்தின் முன் நினைவூட்டும் விருப்பத்தோடு அம்மா பதூசுவை முதன்மை விருந்தினராக அழைத்தேன்.உங்களுக்கு ஒப்புதல் தானே என்று நான் கேட்டபோது ஒப்புதல் அளித்த அண்ணன் அமீர் அவர்களுக்கு நன்றி.

நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த வாய்ப்பால் தலைவர் தமிழரசன் அவர்களைப் பற்றி எடுத்துரைத்து உண்மையான புரட்சித் தலைவனை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவிட்ட ஒருவரைத்தான் சமூகம் புரட்சித்தலைவர் என்று கொண்டாடியது.
நமக்காக இந்த மண்ணில் ரத்தத்தையும் உயிரையும் சிந்தியவரை மறந்துவிட்டது.

அனைவரும் எழுந்து நின்று பலத்த கைத்தட்டல் மூலம் இந்தத் தாய்க்கு நன்றி சொல்லுங்கள் என்றேன்.உணர்ச்சிப்பெருக்கு அரங்கில் நிரம்பிய நேரம் தலைவர் தமிழரசன் அவர்களும் அம்மா பதூசு அவர்களும் அனைவர் நெஞ்சிலும் நிறைந்தார்கள்.

மறதி நிறைந்த மக்கள் கூட்டத்துக்கும் இந்தத் தலைமுறைக்கும் மாணவ சமுதாயத்துக்கும் திரைப்பிரபலங்களுக்கும் தமிழரசன் அவர்களை நினைவூட்டிய நிறைவு எனக்கு.

யுவன் சங்கர் ராஜா அமீர் ஜனநாதன் ராம்ஜி இருக்கும் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழா மேடையில் மேலாடை இன்றி சேலையை போர்த்தி உடல் நலிவுற்ற நிலையில் அமர்ந்திருக்கும் மூதாட்டி யார்? என்கிற கேள்வியில் தமிழரசன் உயிர்த்தெழுந்தார்.

மேடை தமிழ்த்தேசிய விடுதலை அரசியல் களமானது.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response