அமீர் மீது அமலாக்கத்துறை பாய்ந்தது ஏன்?

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) காவல்துறையினர் டெல்லியில் பிப்ரவரி 24 ஆம் தேதி கைது செய்தனர்.

இதன் பின்னணியில் செயல்பட்டது திரைப்படத தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

அவரை டெல்லி என்சிபி காவல்துறையினர காவலில் எடுத்து விசாரித்தனர். சென்னைக்கு அழைத்து வந்தும் விசாரணை நடத்தினர். பின்னர், மீண்டும்டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அவரது நண்பரும், இயக்குநருமான அமீருக்கு அழைப்பாணை அளிக்கப்பட்டது.

அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1 ஆவது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. அவர் அளித்த பதில்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் சென்னை திரும்பினார்.

தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றுஅதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கான வங்கி பரிவர்த்தனை, வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களுடன் டெல்லியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் 5 ஆம் தேதி ஆஜராகுமாறு அமீருக்கு என்சிபியினர் மீண்டும் அழைப்பாணை அனுப்பினர்.

ஆனால், விசாரணைக்கு ஆஜராக அவகாசம் தருமாறு என்சிபி பிரிவுக்கு அமீர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

இதற்கிடையே, போதைப் பொருள்கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோதபண பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் தெரியவந்ததால், இதுதொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் நண்பரான அமீருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள அமீர் வீட்டிலும், தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்தினர்.

சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இங்கு என்சிபி அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தி, வீட்டை பூட்டி சீல் வைத்திருந்தனர். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற உத்தரவுப்படி ஏப்ரல் 6 ஆம் தேதிதான் அது அகற்றப்பட்டது.

சென்னை சாஸ்திரி நகரில் உள்ள பிரபல விடுதி உரிமையாளரின் வீடு,அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

அதேபோல, பெரம்பூரில் ஜாபர் சாதிக்குடன்தொடர்புடைய 3 பேரின் வீடுகளில்சோதனை நடத்தப்பட்டு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விடுதியிலும் சோதனை நடத்தப்பட்டது.இதன் பங்குதாரர் ஜாபர் சாதிக் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு சென்னையில் நேற்றுஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.

அடுத்த கட்டமாக, மேலும் பலஇடங்களில் சோதனை நடத்த அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ரூ.2,000 கோடி போதைப் பொருள்கடத்தல் விவகாரத்தில் டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவை தொடர்ந்து, அமலாக்கத் துறையும்சோதனை, விசாரணை நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடக்கும்போதே அமலாக்கத்துறையும் உள்ளே வந்திருக்கிறது.

இதனால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் அமீர் மீது குற்றம் சொல்ல முகாந்தரமில்லை என்று சொல்லப்பட்டதாகவும் ஆனாலும் அமீர் மீது குற்றம் சாட்டியாக வேண்டும் என்கிற முனைப்பிலேயே அமலாக்கத்துறையை களமிறக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறையை ஏவிவிட்டது போதாதென இப்போது அமீர் போன்றோர் மீதும் அதை ஏவிவிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response