வைரமுத்து தாயை இழிவுபடுத்திய எச்.ராஜா உடனே மன்னிப்புக் கேட்கவேண்டும் – சீமான் எச்சரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் சனவரி 7,2018 அன்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் அந்த விழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பாரதீய ஜனதா எச்.ராஜா உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஒரு மேடையில், வைரமுத்துவை மிகக் கேவலமாக எச்.ராஜா பேசியதோடு வைரமுத்து அம்மாவை தாசி என்று மிகச் சாதாரணமாக மேடையில் பேசுகிறார். அந்தக் காணொலி இணையமெங்கும் உலாவருகிறது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள வைரமுத்து “தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று.

ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று, புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எச்.ராஜாவின் கேவலமான பேச்சுக்கு சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் இதுகுறித்து எழுதியுள்ள பதிவில்…

தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு கவி அடையாளம் கவிஞர் வைரமுத்து அவர்களை இழிவாகப் பேசிய பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும். தவறும் பட்சத்தில் மிகப்பெரிய எதிர்வினையை அவர் சந்திக்கவேண்டிவரும். மதவெறியர்களின் தடித்த வார்த்தைகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

— சீமான்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response