தேசிய நெடுஞ்சாலை 47 ல் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. இவற்றைத் தடுக்க 4 புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை. ஆனால் அக்கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அதிமுக மக்களவை உறுப்பினர் சத்தியபாமா மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில்:
வணக்கம். சேலம்–கொச்சி-கன்னியாகுமரி சாலை (தேசிய நெடுஞ்சாலை எண் 47) தமிழ்நாட்டில் அதிகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மிக முக்கிய நெடுஞ்சாலையாகும். திருப்பூர்நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகார அமைப்பின் கீழ் உள்ள இந்த நெடுஞ்சாலை 59/0 லிருந்து 102/0 கிலோமீட்டர் வரை (பவானி) லக்ஷ்மிநகர் முதல் செங்கப்பள்ளி வரை முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டு போக்குவரத்து 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்டது.
இந்தப் பகுதியில் உள்ள சாலையின் மொத்த நீளம் 43 கிலோமீட்டராகும். மொத்தமுள்ள 22 முக்கிய சாலைச் சந்திப்புகளில் 8 சந்திப்புக்களில் மட்டும்மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. எஞ்சிய 14 சாலைச் சந்திப்புகளில் எந்தப் பாலமும் கட்டப்படவில்லை.
பெரும்பாலான இந்தச் சந்திப்புகளில் அரசுப் பேருந்துகள். சிப்காட் கம்பெனிகளின்பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் ஆகியன தேசியநெடுஞ்சாலை அதிகார அமைப்பின் சாலையைக் கடக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல் காரணமாக 300க்கும் அதிகமான மிகமோசமான சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன.
எனவே அண்டை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் உயிரைப்பறிக்கும் விபத்துகள் நிகழாமல் தடுக்க கீழ்க்கண்ட இடங்களில் மேம்பாலங்கள் உடனடியாகக் கட்டப்பட வேண்டியது மிக அவசியமாகும்.
(1) பெருந்துறை – காஞ்சிக்கோவில் – கவுந்தப்பாடி குறுக்குச் சாலையில் 78/4 கிலோமீட்டரில் ஒரு மேம்பாலம்
(2) பெருந்துறை – துடுப்பதி – மாக்கினம் கோம்பை குறுக்குச் சாலையில் 80/8 கிலோமீட்டரில் ஒரு மேம்பாலம்
(3) கொளத்துப்பாளையம் – விஜயமங்கலம் குறுக்குச் சாலையில் 89/10 கிலோமீட்டரில் ஒரு சாலை மேம்பாலம்
மற்றும்
(4) பெருந்துறை – பெத்தம்பாளையம் – காஞ்சிக்கோவில் குறுக்குச் சாலையில் 79/4 கிலோமீட்டரில் ஒரு மேம்பாலம்.
மேற்குறிப்பிட்ட இடங்களில் ஏழை மற்றும் விவசாயக் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில் மேம்பாலங்களை உடனடியாகக் கட்டித்தர நடவடிக்கை என்று மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து அவற்றிற்கு சுங்கவரியும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர மத்திய அரசு முன்வரவில்லை.
ஏற்கெனவே தன்னுடைய கன்னிப்பேச்சில் இச்சிக்கல் பற்றிப் பேசியிருக்கிறார் சத்யபாமா. இப்போது நிதின்கட்கரியை நேரில் சந்தித்துக் கடிதம் கொடுத்திருக்கிறார். இப்போதாவது அப்பகுதி மக்களின் உயிரைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.