மத்திய அரசின் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான விருதுகள் குறித்து டெல்லியில் கூடிய சாகித்ய அகாடமியின் வாரியக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. `காந்தாள் நாட்கள்’ கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ எனும் நூலை, ‘கசாக்கின் இதிகாசம்’ எனத் தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ளார்.
இந்த நிலையில், கவிஞர் இன்குலாபின் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுத்துவிட்டது. இதுதொடர்பாக அவர் மகள் ஆமீனா, சாகித்ய அகாடமியின் இயக்குநருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘கவிஞர் இன்குலாப் குரலற்றவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அறியப்பட்டவர். அவருக்கான அங்கீகாரம் என்பது மக்கள் கவிஞர் என்பதாகவே இருக்கும். அரசு அளிக்கும் இதுபோன்ற அங்கீகாரங்களை அவரை தேசிய அளவில் கொண்டுசேர்க்கும். ஆனால், கவிஞர் இன்குலாப், தன் வாழ்நாளில் அரசு வழங்கிய எந்த விருதையும் ஏற்றுக்கொண்டதில்லை. `விருதுகளையும் கௌரவங்களையும் எதிர்பார்த்து நான் எழுதுவதில்லை’ என்பார். அரசின் முகங்கள் மாறியிருக்கலாம். ஆனால், அது ஒரே முகமூடியையே அணிந்திருக்கிறது. இன்றையச் சூழலில் வன்முறைகள் ஊக்கமாக நடக்கின்றன. அதேபோல் வகுப்புவாதம், மதவாதம் மற்றும் ஒடுக்குதல் போன்றவையும் நடக்கின்றன. கவிஞர் இன்குலாபின் படைப்புகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. அதுவே ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். அந்தவகையில், கவிஞர் இன்குலாபின் கருத்துகளுக்கு மதிப்பளித்து இந்த விருதை ஏற்றுக்கொள்வதில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்குலாப் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
விருது மறுப்பு
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஒலித்த குரல்களில் ஒன்றாக இருந்த இன்குலாபுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்குவது என்பது இப்படிப்பட்ட நிலைகளில் இருந்து வருபவர்களுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும்.அவர்களது எழுத்துக்கள் இன்னும் பரவலான வாசகர் வட்டத்தை அடையலாம்.
இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது:
’’ எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’
‘’ அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்.
….அதற்கும் மேலே
என் பேனா அழுந்துகையில்
எழுத்தாளன் எவனுக்கும்
கிடைக்காத பரிசு
இந்திய மண்ணில்
எனக்கு நிச்சயம். ‘’
இவ்வாறு விசாரணைகளை வாழும் காலத்திலும் இறந்த பின்னும் நேர்கொண்ட இன்குலாபிற்கு அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம்.இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும்காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார்.
அரசு முகங்கள் மாறலாம்.ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும்,இனவாதமும்,வர்க்கபேதமும்,வன்முறையும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது.விமர்சிப்பவர்கள்,எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்.இன்குலாபிற்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டி பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு.அதுவே அவருக்கு ஒப்புகையாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும்.
இன்குலாப் அவர்களின் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை.
இறுதியாக இன்குலாபின் வரிகளில்
‘’விருதுகள் கௌவரவப்படுத்தும்
பிணமாக வாழ்ந்தால்
என் போன்றோரை…’’.
இவண்,
இன்குலாப் குடும்பத்தினர்.,
கமருன்னிஸா
சா.செல்வம்
சா.இன்குலாப்
சா.அமினா பர்வின்