அண்ணாநூலகம் கருணாநிதியின் குடும்பச் சொத்தா?

அண்ணா நினைவு நூலகம் முறையான பராமரிப்பு இன்றி பாழ்பட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 அதில், அண்ணா நினைவு நூலகத்தில் நான்காண்டுகளாக புதிதாக ஒரு புத்தகம் கூட வாங்கவில்லையாம். பார்வை யற்றோருக்கான, “பிரெய்லி” பிரிவு பராமரிப்பின்றி கிடக்கிறதாம். குழந்தைகளை அழைத்து வர பெற்றோர் தயங்குகிறார்களாம். மாதம் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியும் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லையாம். போட்டித் தேர்வுப் பிரிவில் புதிய புத்தகங்களின்றி, பட்டதாரிகள் வருவது குறைந்து விட்டதாம். நூலக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான விடுதி, காவலாளிகள் தங்குமிடமாக மாறியுள்ளதாம். அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் பார்த்து வியந்த 1,500 பேர் அமரக் கூடிய ஆடிட்டோரியம், ஆள் அரவமின்றி பூட்டிக் கிடக்கிறதாம். நூலகத்தின் வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில் பணியாற்ற ஆட்கள் இல்லை. எட்டு மாடிகளில் பொருத்தப்பட்ட 500 கேமராக்களின் லென்ஸ்கள் செயலற்று உள்ளன.

கணினிகள் இயங்கவில்லை. ஓலைச் சுவடிகளுக்கான தனிப் பிரிவு மாயமாகி விட்டது. புத்தகங்களுக்கான சரியான தகவல் விவரம் இல்லை. வாசிப்பாளர்களின் வருகை நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்பது 1200 பேராகக் குறைந்து விட்டது. இதனால் பல கோடி ரூபாய் செலவு செய்து கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட – பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக எழுப்பப் பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தற்போது அனைத்து வசதிகளும் பாழ்பட்ட நிலையில் உள்ளன என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, அண்ணாநினைவு நூலகம் தமிழ்மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட ஓர் அறிவுக்கோயில். ஆட்சிக்கு வந்த நாள்முதல். அது கருணாநிதியின் குடும்பச் சொத்து என்று நினைத்து அதை எவ்வாறெல்லாம் சீர்குலைக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சீரழித்துவருகிறது அதிமுக அரசு. கருணாநிதி கட்டியது என்கிற காரணத்தினாலேயே அதுபற்றி யாரும் பேசமறுப்பது ஆரோக்கியமானதல்ல. நூலகம் என்பது அறிவை வளர்க்கக்கூடிய இடம். தமிழ்மக்களுக்கு அறிவு வளரக்கூடாது என்று எண்ணக்கூடிய அதிமுக தலைமையை கருணாநிதியின் மீதுள்ள வெறுப்பு காரணமாகக் கண்டிக்காமல் இருப்பதும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் சரியல்ல. நூலகத்தை அழிக்க நினைக்கும் ஆதிக்க சூழ்ச்சியை எக்காரணம் கொண்டும் ஆதரிக்கக்கூடாது என்றும் அண்ணாநூலகத்தைப் பழைய பொலிவுடன் மீட்டெடுக்க வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் பேசத்தொடங்கியுள்ளனர்.

பேச்சு செயலுக்கு வந்து நூலகத்தை மீட்டெடுக்கும் நாள் தமிழினத்துக்கே நன்நாள் என்பதில் மிகையில்லை.

Leave a Response